`கால்நடைகளுக்குத் தண்ணீரோடு சேர்த்து உணவு!' - புதுக்கோட்டை தீயணைப்புத்துறையின் அசத்தல்



கடந்த சில வருடங்களாகவே, கோடை துவங்குவதற்கு முன்பே, வெயில் சுட்டெரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறிவருகின்றனர். மனிதர்களே வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தவிக்கும் நிலையில், கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட விலங்கினங்களின் நிலைதான் அவலம்.


தற்போது, வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளே தண்ணீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. இந்த நிலையில்தான், தற்போது, தமிழக தீயணைப்புத் துறையால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், பறவைகளின் தாகத்தைப் போக்கும் வகையில், தீயணைப்பு நிலையங்களுக்கு முன்பு தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மண்டல தீயணைப்புத் துறை இணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் உத்தரவின் பேரில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 தீயணைப்பு நிலையங்களிலும் தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் தொட்டிகளில் தினம், தினம் ஆடு, மாடு உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் தண்ணீர் குடித்துவிட்டுச் செல்கின்றன. நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குறைய, குறைய உடனே தண்ணீரை நிரப்புகின்றனர். ஒரு சில நிலைய அலுவலர்கள் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதோடு, தவுடு, புண்ணாக்கு வாங்கி வந்து தண்ணீரில் கலந்து வைத்து அதன் பசியையும் போக்குகின்றனர்.


கோடை வெயிலில் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து கால்நடைகளின் தாகத்தைப் போக்கி வரும் தீயணைப்பு வீரர்களைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதுபற்றி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, ``மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு வரும் ஆடு, மாடுகள் இந்த வழியாக வரும்போது, தொட்டியில் உள்ள தண்ணீரைக் குடித்துவிட்டுச் செல்கின்றன. வீட்டுல வளர்க்கிறது மட்டுமல்லாம, சாலையிலும் ஏராளமான மாடுகள் சுற்றித் திரியுது. சாலையில் சுற்றித்திரியிற மாடுகளுக்கு எல்லாம் இந்தத் தண்ணீர் தொட்டிதான் பசியைப் போக்குது.

புல், புண்ணாக்கு இல்லாமல் கூட கால்நடைகள் இருந்திடும். ஆனா தண்ணீர் இல்லாம இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது. அதுக்காகதான் இந்த முயற்சி. ஒரு சில தீயணைப்பு நிலையங்களில் பறவைகளுக்காகவும் தனியாக தண்ணீர் வச்சிக்கிட்டு வர்றோம். தொடர்ந்து, கோடை முடியும் வரை கால்நடைகளுக்கு இருக்கும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதோட, இன்னும் கூடுதலான தொட்டிகளை ஏற்படுத்தணும்" என்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments