மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்த பயணி.. நடுவானில் மரணம்.. பயணிகள் அதிர்ச்சிமலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணி நடுவானில் திடீரென உயிரிழந்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சீனா நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி கொண்ட கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள்ளும் ஊடுருவியது. இந்தியாவில் இதுவரை 39 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் வெளி நாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பிய 1086 பேருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை.

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வரும் பயணிகளும் அங்குள்ள மருத்துவ பரிசோதனை மையத்தில் முழு பரிசோதனை செய்யப்பட்ட பிறகே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தினமும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பயணிகள் இவ்வாறு பரிசோதனை செய்யப்படுகிறார்கள். கடந்த 20 நாட்களில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் கொரோனா வைரஸ் அறிகுறியான சளி, காய்ச்சல், இருமல், முச்சுதிணறல் ஆகியவற்றுடன் விமானத்தில் இருந்து இறங்கியதால் அவர்கள் மட்டும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனால் திருச்சி மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

விமான நிலையத்தில் சோதனை
இந்தநிலையில் சென்னை காஞ்சிபுரம் வாலிபர் , கேரள வாலிபர்கள் 5 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால் திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் 3 மருத்துவ பரிசோதனை மையங்கள், 7 டாக்டர்கள்மற்றும் நர்சுகள் கொண்ட மருத்துவ குழு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு பயணிகள் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தனியார் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 180 பயணிகள் பயணித்தனர். கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கையாக விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.

நடுவானில் அவதி
விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்த மலேசியா சலாலம்புர் சுபம்ஜெயா பகுதியை சேர்ந்த சென்னையா (வயது 65) என்ற பயணி தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தார். உடனே விமானத்தில் பயணித்த டாக்டர் மற்றும் பணிப்பெண்கள் சென்னையாவுக்கு அணிவிக்கப்பட்டிருந்த முகக்கவசத்தை கழற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் சென்னையாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பயணிகள் அச்சம்
இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் விமானம் திருச்சியை நெருங்குவதற்குள் நடுவானிலேயே சென்னையா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாரடைப்பால் இறந்தாலும், கொரோனா நோய் பீதி காரணமாக பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அவர்களை விமானிகள் மற்றும் பணிப் பெண்கள் அமைதிப்படுத்தினர்.

கொரோனா இருந்ததா
திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பிறகு சென்னையாவின் உடல் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு ஆம்புலன்ஸ மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாரடைப்பால் இறந்திருந்தாலும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

உண்மை தெரியும்
பிரேத பரிசோதனை முடிவில் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும். இதற்கிடையே சென்னையாவுடன் பயணம் செய்த பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் இறந்த சென்னையா மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்தவர் ஆவார். அவர் தனியாக வந்துள்ளார். அவருடன் சூட்கேஸ், கைப்பை இருந்துள்ளது. அதை போலீசார் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளனர். சென்னையா மரணம் குறித்து மலேசியாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் திருச்சியில் உள்ள உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணி திடீ ரென இறந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments