பிளஸ்-2 பொதுத்தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 18,234 மாணவ-மாணவிகள் எழுதினர் 924 பேர் வரவில்லை



   
 புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் தேர்வினை 18 ஆயிரத்து 234 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 924 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 மையங்களில் தமிழ் தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் 9.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

பிரார்த்தனையை தொடர்ந்து தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர். தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள்-பெற்றோர்கள் வாழ்த்து

பிளஸ்-2 தேர்வு எழுத சென்ற மாணவர்களின் பெற்றோர்களில் சிலர் தங்களது குழந்தைகளை பள்ளி வரை கொண்டு வந்து, அவர்களை தேர்வறைக்கு அனுப்பு வைத்து விட்டு சென்றனர். முன்னதாக சில பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு பேனா உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி வாழ்த்து கூறியும், நெற்றியில் விபூதி பூசி தேர்வு மையத்தில் விட்டு சென்றதையும் காண முடிந்தது. இதே போல் மாணவ, மாணவிகள் தேர்வறைக்கு செல்வதற்கு முன் தங்களுக்கு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

அப்போது ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு கைக்கொடுத்தும், ஆசிர்வாதம் வழங்கியும் தேர்வறைக்கு அனுப்பி வைத்தனர். தேர்வு தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து படித்ததை கடைசியாக ஒரு முறை அவசர, அவசரமாக புத்தகத்தை புரட்டி பார்த்தனர்.

18, 234 பேர் எழுதினர்

பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை எழுதினர். 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 279 மாணவ, மாணவிகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 516 மாணவ-மாணவிகளும், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 363 மாணவ, மாணவிகள் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 158 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொது தேர்வை எழுத இருந்தனர். இதில் நேற்று நடந்த தமிழ் தேர்வில் 7 ஆயிரத்து 950 மாணவர்களும், 10 ஆயிரத்து 284 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 234 பேர் தேர்வு எழுதினர். இதில் 35 தனித்தேர்வர்களும் அடங்குவர். மேலும் தேர்வில் 565 மாணவர்களும், 359 மாணவிகளும் என மொத்தம் 924 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் 37 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வெழுதினர்.

125 பறக்கும் படை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 86 தலைமை ஆசிரியர்களும் மற்றும் 91 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 1,314 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்-வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 125 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி வந்து கண்காணித்தனர். காலை 10.15 மணிக்கு தொடங்கி தேர்வு, மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. தமிழ் தேர்வு என்பதால் எவ்வித ஒழுங்கீன செயலிலும் ஈடுபட்டதாகவும், காப்பி அடித்ததாகவும் யாரும் பிடிபடவில்லை.

தடையில்லா மின்சாரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வினை முன்னிட்டு தேர்வு நடைபெறும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் மாணவ, மாணவிகள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங் களுக்கு வினாத்தாள் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதற்கும், தேர்வு முடிந்ததும் விடைத்தாளை கொண்டு செல்லவும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கும், ஒவ்வொரு தேர்வு மைய நுழைவு வாயிலிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மவுண்சியோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments