புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் உரியவர்களிடம் ஒப்படைப்பு: அருண்சக்தி குமார் தகவல்!ஊரடங்கு உத்தரவின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.


இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த 25-ந்தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மருந்தகம், மளிகை கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியே வரலாம் என்ற நிலையில் அதனை மீறி பலர் தேவையில்லாத காரணங்களுக்காக பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். அவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதையடுத்து ஊரடங்கின் போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வாகன உரிமையாளர்கள் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணிவரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என்ற முறையில் கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும். 25-ந்தேதியில் இருந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்திற்கு வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தகவல் முன்னதாகவே அனுப்பப்படும். தகவல் பெற்றவர்களின் ஆவணங்கள் நேரில் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும். 

எனவே வாகன உரிமையாளர்கள் வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் அசல் மற்றும் நகல், வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments