உஷாரய்யா உஷாரு.! ATM கார்டை புதுப்பிக்கனும்.! வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் எடுத்து மோசடி.!ஏ.டி.எம். ரகசிய குறியீடு எண்ணை பெற்று பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.28 ஆயிரம் எடுத்து மற்றொரு பெண் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.


புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மாமுண்டிமட வீதியை சேர்ந்த சிவராமனின் மனைவி தமிழ்செல்வி (வயது 36). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக ஒரு பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு செல்போனில் தமிழ்செல்வியிடம் பேசியுள்ளார். அப்போது அவரிடம் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க தங்களின் கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். கார்டு எண்ணை தெரிவிக்கும் படி அந்த பெண் கேட்டுள்ளார். இதனை நம்பிய தமிழ்செல்வி தனது வங்கியின் ஏ.டி.எம்.கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணையும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். உடனே எதிர் முனையில் பேசிய பெண் செல் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இந்த நிலையில் தமிழ்செல்வியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது கணக்கில் இருந்து ரூ.28 ஆயிரத்து 907 எடுக்கப்பட்டதாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த பெண் பேசிய செல்போன் எண்ணை பல முறை தொடர்பு கொண்டார். ஆனால் பதில் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதைத்தொடர்ந்து வங்கி மேலாளர் பேசுவது போல பேசி விவரங்களை பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் தமிழ்செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி விசாரித்து வருகிறார்.

ஒரு நிமிடம் கவனிக்கவும்..!

போலியாக வரும் குறுஞ்செய்திகள், போன் அழைப்புகளை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். வங்கி அதிகாரிகள் யாரும் ஏ.டி.எம். கார்டு நம்பர், ரகசிய எண், பின் எண், பாஸ்வேர்டு போன்றவற்றை போன் வழியாக கேட்பதில்லை. உங்கள் ஏ.டி.எம். கார்டுகளின் செயல்பாட்டை தனிநபரால் முடக்க முடியாது.

யாராவது உங்கள் ஏ.டி.எம். கார்டு குறித்த விவரங்கள், வங்கிக்கணக்கு குறித்த ரகசிய தகவல்களை போன் வழியாக கேட்டால் அதற்கு பதில் அளிக்காமல் வங்கி அதிகாரிகளை சென்று பாருங்கள். அவ்வாறு போன் வழியாக கேட்பவர்களிடம் உரிய தகவலை கூறி கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை இழந்துவிடவேண்டாம்.

இதுபோல் போன் மூலம் தகவல் கேட்டு மோசடி செயல்கள் குறித்து கடந்த காலங்களில் போலீஸ் நிலையங்களில் நிறைய புகார்கள் வந்துள்ளன. படித்தவர்கள் நிறைய பேரும் இவ்வாறு ஏமாந்துள்ளனர். எனவே இதுபோன்றவர்களிடம் ஏமாந்துவிடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments