மீமிசல் அருகே வெளிவயல் ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள், தாமரைக் கொடிகளில் சிக்கி பலி...ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமிகள் 2 பேர் தாமரைக் கொடிகளில் சிக்கிக் கொண்டதால் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் வட்டம், மீமிசல் அருகில் உள்ள பழங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் பவதாரணி (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா எம்.ஆர்.பட்டினத்தை சேர்ந்த ராயப்பன் மகள் பிரியா (16). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பழங்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பிரியா வந்துள்ளார். பிரியாவின் உறவினர் வீடும், பவதாரணி வீடும் அருகருகே உள்ளதால் 2 பேரும் சேர்ந்து விளையாடி வந்தனர்.

இந்நிலையில் இன்று இவர்கள் இருவரும் வெளிவயலில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் உள்ள தாமரைக்கொடியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை மீமிசலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 மாணவிகளும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே மருத்துவமனைக்கு வந்த பவதாரணி பெற்றோர் மற்றும் பிரியாவின் உறவினர்கள் பவதாரணி, பிரியா உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ‌வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போதைய சூழ்நிலையில், துக்க நிகழ்ச்சியில் 30 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது என்றும் சமூக இடைவெளியில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியதால் அதன்படியே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. இரு சிறுமிகள் இறந்த சம்பவத்தால் அந்த கிராமங்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments