வயிற்று பிழைப்பிற்காக 95 வயதில் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி விற்கும் முதியவர்.!ஊரடங்கு நேரத்திலும் வயிற்று பிழைப்பிற்காக 95 வயதில் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி முதியவர் விற்பனை செய்கிறார். இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பளுவான் தெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 95). இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். செல்லையா தனது தோட்டத்தில் தனியாக வசிக்கிறார். தன் தேவைகளுக்காக தானே உழைத்து சம்பாதித்துக் கொள்கிறார். மகன்கள் உணவு கொடுத்தாலும் உழைப்பை விட முடியாது என்கிறார். இப்போது நுங்கு சீசன் என்பதால் உயரமான பனைமரங்களில் ஏறி நுங்கு இறக்கி தனி ஆளாக மூட்டையில் கட்டி சைக்கிளில் ஏற்றி வந்து கொத்தமங்கலம் வாடிமாநகரில் விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து செல்லையா கூறுகையில், எனக்கு 95 வயது ஆகிறது. எனக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி சென்றுவிட்டனர். 15 வயதில் இருந்து பனை மரம் ஏறி நுங்கு, பனை ஓலை வெட்டும் வேலை செய்து வருகிறேன். பனை ஓலை வெட்டி காயவச்சு வீடுகள் கட்டிக் கொடுப்பேன். பனை மரம் ஏறி நுங்கு வெட்டி கொண்டு வந்து கடைவீதியில் விற்கிறேன். ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை வருமானம் வரும். 

அதேபோல இந்த சீசன் முடிஞ்சதும் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பேன். தென்னை மரம் சுத்தம் செய்வேன். இப்ப எனக்கு வயதாகிவிட்டதால் யாரும் தென்னை மரம் ஏற அழைப்பதில்லை. நுங்கு சீசன் முடிந்ததும் என்னிடம் உள்ள 6 தென்னை மரங்களில் காய்க்கும் தேங்காய்களின் வருமானத்தில் தான் ஒரு வருட வாழ்க்கை. யாரிடமும் உணவுக்காக போய் நிற்கமாட்டேன்.

இப்போது கொரோனா வைரஸ் பரவுகிறது என்று கடைகளை எல்லாம் மூடி வீட்டனர். கடைவீதியும் வெறிச்சோடிக் கிடப்பதால் நான் கொண்டு போகிற நுங்குகளை சாலை ஓரம் வைத்து விற்பேன். இதுவரை அரசு உதவித் தொகை வாங்கவில்லை. உடலில் தெம்பு இருக்கு வரை உழைக்கிறேன். 

ஒவ்வொருவரும் தங்களுடைய இறுதி காலம் வரை உழைத்து பிழைக்க வேண்டும் என்றார். 95 வயதிலும் உழைப்பே முக்கியம் என்று உழைத்துக் கொண்டிருக்கும் முதியவர் செல்லையாவை பாராட்டும் அப்பகுதி மக்கள், அவருக்கு மாவட்ட நிர்வாகம் கருணை உள்ளத்தோடு முதியோர் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments