அமீரகத்தில் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவி.! தூதர் பவன் கபூர் தகவல்.!‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அமீரகத்துக்கான இந்திய தூதர் பவன் கபூர் தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

இந்தியர்களுக்கு ‘கொரோனா’

அமீரகத்தில் ‘கொரோனா’ வைரசால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இந்தியாவை சேர்ந்த சிலரும் அடங்குவர். இதேபோல் ‘கொரோனா’ அறிகுறி தென்பட்டவர்களும் சக தொழிலாளர்களுடன் தொழிலாளர் முகாம்களில் ஒன்றாக தங்கியுள்ளனர்.

இதனால் மற்ற தொழிலாளர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ‘கொரோனா’ அறிகுறி தென்பட்ட இந்திய தொழிலாளர்கள் தனியாக தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை தூதரகம் மேற்கொள்ளும். இது குறித்து அமீரக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு தங்கும் வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் பேசப்பட்டு வருகிறது. ஒரு சிலர் ‘கொரோனா’ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தூதரகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த பணிகள் இந்திய சங்கங்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் விமான வசதி செய்து கொடுக்கப்படும்.

இது குறித்து அமீரக அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். எனவே யாரெல்லாம் அவசரமாக சொந்த ஊர் செல்ல வேண்டுமோ அவர்கள் பயணம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மருத்துவ ஆலோசனை தேவைப்படும் இந்தியர்கள் ca.abudhabi@mea.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும்.

ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 050 8995583 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அமீரகத்தில் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் இந்திய சமூகத்தினரின் பங்களிப்பு மிகவும் மகத்தானது.

அதே நேரத்தில் அமீரக அரசும், சுகாதாரத்துறையும் சிறப்பான மருத்துவ சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருவது பாராட்டுக்குரியது. இது ஒரு கடினமான நேரம் தான். எனினும் நாம் இத்தகைய சூழ்நிலையைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. அமீரகத்தில் உலக தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் நன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments