ஆவுடையார்கோவில் அருகே சரக்கு வேனில் ‘பால்வண்டி அவசரம்‘ என எழுதி மணல் கடத்தியவர் கைது.!புதுக்கோட்டை அருகே சரக்குவேனில் மணல் அள்ளிச்சென்ற வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா கிருஷ்ணாஜிபட்டினத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 26). இவர் சிறுகாசாவயல் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவருடைய சரக்குவேனை ஓட்டி வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜதுரை, சரக்கு வேனில் ‘பால்வண்டி அவசரம்‘ என எழுதி ஒட்டிக் கொண்டு, மணல் கடத்தி விற்று வந்துள்ளார்.

இதேபோல், நேற்று பெருமருதூர் ஆற்றில் இருந்து சரக்குவேனில் மணல் அள்ளிக்கொண்டு ராஜதுரை சென்று கொண்டிருந்தார். அப்போது, சரக்கு வேனின் பின்புறம் தண்ணீர் வழிந்ததைக் கண்ட ஆவுடையார்கோவில் போலீசார், அதை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதை அறியாத ராஜதுரை, பள்ளத்திவயலில் உள்ள ஒரு வீட்டில் சரக்குவேனில் இருந்த மணலை இறக்கியுள்ளார்.

உடனடியாக போலீசார் ராஜதுரையை கையும், களவுமாக பிடித்துள்ளனர். இதை எதிர்பார்க்காத ராஜதுரை, தான் மாட்டிக் கொண்டோமே என்ற எண்ணத்தில் வாகனத்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து போலீசாரை தாக்கியுள்ளார்.

பின்னர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில், அருகே இருந்த வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து, கழுத்தை அறுத்துக் கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அங்கேயே ராஜதுரை மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், படுகாயமடைந்த ராஜதுரையை மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் அள்ளிச் சென்றவரை பிடித்த போலீசாரை தாக்கிவிட்டு, தற்கொலை முயற்சி செய்த வாலிபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments