கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் ஊரடங்கால் முடங்கிய மீன்பிடி தொழில்.!



ஊரடங்கால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தொழில் முடங்கியது. அதனால் மீன்பிடி தடை காலத்தில் அரசு வழங்கும் நிவாரண தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விவசாயம், நெசவு, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு மீன்பிடி தொழிலும் விதிவிலக்கல்ல. ஊரடங்கு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், அவர்களும், மீன்பிடி சார்ந்த தொழில் செய்வோரும் முடங்கிப்போயுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், கட்டுமாவடி முதல் அரசங்கரை வரையில் 3000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த மீன்பிடி தொழிலால் பல்வேறுபட்ட மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வந்ததோடு, பல லட்சம் ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித் தந்தது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த மீன்பிடி தடை காலத்தில் மீன் இனங்கள் முட்டையிட்டு இனவிருத்தி செய்யும் காலமாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த தடை காலங்களில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் நாட்டுப்படகு மூலமாக குறைந்த ஆழத்தில் முரல் வலை, நண்டு வலை, செங்கனி வலை போன்ற கடலின் மேற்பரப்பில் வலையை விரித்து மீன் பிடிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

மீனவர்கள் பாதிப்பு.!

ஏற்கனவே 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், தொடர்ந்து வரும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தால் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறுகையில், விசைப்படகு மீனவர்கள் முற்றிலும் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் மாற்று தொழில் எதுவும் இல்லை. 144 தடை உத்தரவு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். இந்த தடை முடிந்த பிறகு எங்களுக்கு 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் வர இருப்பதால் மிகவும் சிரமத்தில் உள்ளோம். எனவே அரசு எங்களுக்கு முழு நிவாரண தொகை வழங்க வேண்டும், என்றார்.

ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டுகோள்.!

ஜெகதாப்பட்டினம் முன்னாள் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ராமதேவன் கூறுகையில், மீனவர்கள் 144 தடை உத்தரவு மற்றும் மீன்பிடி தடைக்காலம் காரணமாக 3 மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே மீன்பிடி தடை காலத்தில் அரசு வழங்கும் நிவாரண தொகை ரூ.1,000-ஐ ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், என்றார்.

கட்டுமாவடியை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர் கூட்டமைப்பு சங்க தலைவர் பசுபதி கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். 144 தடை உத்தரவு மற்றும் மீன்பிடி தடை காலம் தொடங்க இருப்பதால் தொடர்ந்து 3 மாதம் வீட்டிலேயே முடங்கி உள்ள சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments