டியூசனுக்கு போகணுமா…எங்க அப்பா, அம்மா, மிஸ்சை கைது பண்ணுங்க ஆபீசர்...போலீசாரை வீட்டுக்கே கூட்டிச்சென்ற 5 வயது பொடியன்.!



நாடே லாக்டவுன்ல முடங்கியிருக்கும்போது தன்னை மட்டும் படிப்பதற்கு டீயூசன் அனுப்பவதாக கூறி பஞ்சாப்பில் 5 வயது சிறுவன் ஒருவன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் கூறி அதிகாரியை வீட்டுக்கே அழைத்து சென்றான்.


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அளவில் நாளை மறுதினம் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கடந்த இரண்டு மாதங்களாக நர்சரி பள்ளி தொடங்கி கல்லூரிகள், ஐஐடிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு கூட ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புக்களும் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் முடங்கியுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில்,  ஊரடங்கு நேரத்தில் தன்னை கட்டாயப்படுத்தி டியூசன் அனுப்புவதால் 5 வயது சிறுவன் அதிருப்தி அடைந்தான்.  அனைவரும் வீ்ட்டில் இருக்கும்போது தன்னை மட்டும் பெற்றோர் வற்புறுத்தி டியூசன் அனுப்பி வைப்பதால் அவனுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது. இதனைத்தொடர்ந்து பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த பொடியன் டியூசனுக்கு செல்லாமல், காவல் நிலையத்துக்கு சென்றுள்ளான். 

ஊரடங்கு நேரத்தில் படிக்கச்சொல்லி தன்னை டியூசன் அனுப்பிவைப்பதாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளான். டியூசன் அனுப்பி வைக்கும் அப்பா, அம்மா, டியூசன் சொல்லி தரும் ஆசிரியை என மூன்றுபேரையும் கைது செய்ய வேண்டும் என்றும் சிறுவன் கூறியுள்ளான்.  சிறுவனின் அழுகையை அடக்கிய படாலா டிஎஸ்பி குர்திப் சிங் சிறுவனை அழைத்துக்கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியை வீட்டிற்கு சென்றார்.

வீட்டின் கதவு தட்டப்பட்டதால் வெளியே வந்த ஆசிரியை போலீசார் கூட்டத்தை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டிஎஸ்பி அவரிடம் டியூசன் எடுக்கிறீர்களா என கேட்டபோது ஆசிரியை இல்லை என மறுத்துவிட்டார். ஆனால் சிறுவனோ ஆசிரியை தனக்கு மட்டும் டியூசன் எடுப்பதாக தெரிவித்தான். 

இதனைத் தொடர்ந்து அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். பின்னர் ஊரடங்கு நேரத்தில் இதுபோன்று நடந்துக் கொள்ளக்கூடாது என டிஎஸ்பி ஆசிரியைக்கு அறிவுறுத்தினார். பின்னர் சிறுவனின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் டிஎஸ்பி அறிவுரை கூறி சிறுவனை ஒப்படைத்தார். ‘‘நாங்க எல்லாம், எங்க காலத்துல டியூஷன் மிஸ் குட்டினாலும் பொறுத்திட்டு வந்தோமேடா... நீ போலீசையே கூட்டிட்டு வந்திருக்கேயடா...’’ என்று வடிவேலு பாணியில் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் சிறுவனின் பெற்றோர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments