விராலிமலை அருகே கத்தி முனையில் செயின் பறிப்பு - சிக்கிய கொள்ளையர்களுக்கு காலில் மாவுக் கட்டு.!



கத்தி முனையில் பெண்ணிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை புதுக்கோட்டை போலீஸார் அதிரடியாக கைது செய்து காலில் மாவுக் கட்டுடன் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களை புதுக்கோட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து அவர்கள் மூவரும் பைக்கில் தப்ப முயன்றனர். இதனால் மூன்று கொள்ளையர்களுக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் மூவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம் நேற்று முன்தினம் இரவு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை  காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து வழிப்பறி சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ய புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்திகுமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கீரனூர் டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட  திருச்சி மாவட்டம் எடமலைபுதூரைச் சேர்ந்த முருகன், நந்தகுமார், ஹேமராஜ் ஆகிய 3 பேரை  சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர்கள் மூவர் மீதும் பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.


மூவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தபோது போலீசாரின் பிடியில் இருந்து மூவரும் தப்பி இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்ததில் அவர்களின் கால் உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து மூவருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலில் மாவு கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீப காலமாய் செயின் பறிப்பு, ரவுடித்தனம், மிரட்டல்,கொலை போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபடும் கொடும் குற்றவாளிகள் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவுக் கட்டு போடுவது சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் பிரபலமாக இருந்து வந்தது. 

போலீஸாரின் மாவுக் கட்டு ட்ரீட்மெண்ட்டுக்கு பொதுமக்களிடன் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது புதுக்கோட்டையில் பிடிபட்ட கொள்ளையர்கள் 3 பேர் பைக்கில் தப்பி ஓட முயன்று காலில் மாவுக் கட்டுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்கு அனுமதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments