கொரோனா வைரஸ் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? கலெக்டர் உமாமகேஸ்வரி விளக்கம்.!கொரோனா வைரஸ் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி விரிவான விளக்கம் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் கூறிருப்பதாவது:-

தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இரவு, பகல் பாராது போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியில் வர நேர்ந்தால் முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியை பின்பற்றிடவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


குறிப்பாக பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு தமிழக அரசால் ஏற்படுத்தப்படும்  விழிப்புணர்வை போன்றே ஏனைய பாதுகாப்பு வழிமுறைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம் மையங்கள், மருந்துகடைகள், காய்கறி, மளிகை உள்ளிட்ட இடங்களில் ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை கொடுக்கும் போதும், வாங்கும் போதும் பாதுகாப்புடன் கையாள வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளியை கடைபிடித்தாலும் ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை கையாலும்போது மேற்கூறிய வழிமுறைகளில் பலரின் கைகளை கடந்து வருவதால் ஒருவரிடம் வைரஸ் தொற்று இருந்தால், இதன்மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவ வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, காய்கறி, மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மேற்குறிப்பிடப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் பல்வேறு நிலைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் மூலம் இடப்பெயர்வு அடைகிறது. இத்தகைய சூழ்நிலையில் நாம் வீட்டிற்குள் கொண்டு செல்லும் அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்துவதில் உரிய விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டியது இத்தருணத்தில் அவசியமான ஒன்றாகும்.

அந்தவகையில் வெளியில் இருந்து வீட்டிற்குள் கொண்டு வரப்படும் பால் பாக்கெட், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை நன்கு கழுவிய பின்பே வீட்டுனுள் எடுத்து செல்ல வேண்டும். மளிகை பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வீட்டில் உள்ள ஒருநபர் மட்டும் பொருட்களின் மேல் உறையினை பிரித்து பாட்டில்கள் அல்லது உரிய பாத்திரங்களில் கைகள் படாதவாறு பொருட்களை நிரப்பிய பின் பொருட்கள் வாங்கி வந்த மேல் உறையினை மூடியுடன் கூடிய குப்பை தொட்டியினுள் போட்டு கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவ வேண்டும்.

வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கு முன்பும், வீட்டிற்கு திரும்பும் போதும் கைகளை சோப்பு அல்லது  கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கடைகளுக்கு காய்கறிகள் மற்றும் இதர பொருட்கள் வாங்கிட அதற்கென தனியாக ஒரே பையினை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பையினை வீட்டிற்குள் எடுத்து செல்லாமல் வெளியிலேயே தொற்று நீக்கம் செய்திட வேண்டும்.

வெளியில் செல்லும் நபர் கையுறை அணிந்து செல்வதுடன்,  அக்கையுறையை வீட்டினுள் எடுத்து செல்லாமல் வெளியிலேயே தொற்று நீக்கம் செய்திட வேண்டும். சில வீடுகளில் பால் பாக்கெட்டுகளை போடுவதற்கு வீட்டின் வாசலில் எப்போதும் வைக்கப்பட்டுள்ள துணிப்பை போன்றவற்றில் உள்ளே கைகளை விட்டு எடுப்பதை இத்தகைய தருணத்தில்  தவிர்க்கும் வகையில் பிளாஸ்டிக் கூடைகள் அல்லது அகண்ட வாய் உடைய டப்பாக்கள் பொருத்தி அதில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து கழுவி பயன்படுத்துவது பாதுகாப்பான முறையாகும்.

வீட்டில் உள்ள ஒரு நபர் மட்டுமே அனைத்து தேவைகளுக்கும் வெளியில் சென்று வர வேண்டும். வீட்டிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.  வெளியில் சென்று வருபவர்கள் அவர்தம் உடைகளை துவைத்து குளித்த பின்பு வீட்டினுள் நுழைய வேண்டும். கண், மூக்கு, வாய் பகுதிகளை தொடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடை வீதிகள் உள்ளிட்ட பொதுஇடங்களுக்கு குழந்தைகளை கட்டாயம் அழைத்து செல்ல கூடாது.

மேலும் கதவின் கைப்பிடி, படிக்கட்டின் கைப்பிடி, மின்தூக்கியின் பொத்தான், ஏ.டி.எம் இயந்திரத்தின் பொத்தான்கள், கைபேசி, வங்கி மற்றும் கடைகளில் உள்ள மேஜை மேற்பரப்புகள், கணினி சுட்டிகள், குவளை ஆகியவற்றை பாதுகாப்பற்ற முறையில் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவ வாய்ப்பாக அமைந்துள்ளது.குறிப்பாக ஒருவர் பயன்படுத்தும் கைபேசியினை மற்றவர்கள் பயன்படுத்தாதவாறு  பார்த்து கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புபவர்கள் அன்றாடம் எடுத்து செல்லும் கைப்பை, பேனா, மூக்குக் கண்ணாடி, செல்போன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கிருமிநாசினி கொண்டு தொற்று நீக்கம் செய்த பின் மட்டுமே வீட்டுனுள் எடுத்து செல்ல வேண்டும். வெளியில் இருந்து வீட்டிற்குள் கொண்டுவரப்படும் பொருட்களை வெறும் கைகளால் நேரடியாக தொடுவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஊட்டசத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வதுடன், கண்டிப்பாக காய்ச்சிய நீரினை மட்டுமே அருந்திவர வேண்டும். ஐஸ்கிரீம் மற்றும் குளிரூட்டப்பட்ட குளிர் பானங்களை அருந்துவதை தவிர்த்தல் வேண்டும். உணவுகளை சூடான நிலையில் உண்பது சிறந்த முறையாகும்.  வைட்டமின் ‘சி“ சத்து அடங்கிய நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்ச் உள்ளிட்டவைகள் தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம். வயதானவர்கள் மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம். 

மேலும் தமிழக அரசால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸை நம் வீடுகளுக்குள் வராமல் தவிர்த்து நம்மையும், நமது குடும்பத்தினரையும் நோய் தொற்றுகளிலிருந்து முழுமையாக பாதுகாத்துகொள்ள முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments