"அரசு வேலைகளில் முறைகேடுகள் செய்தால்தான் காசு பார்க்க முடியும்" ஊராட்சி செயலரின் ஓபன் டாக்.!



கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் அமிர்தலிங்கம். அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பாண்டியன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் அரசு பணிகள் தொடர்பாக கைபேசி வழியாக பேசிக்கொண்ட  உரையாடல் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.


அந்த உரையாடலில், "அரசாங்க வீடு கட்டுதல், தார் சாலை அமைத்தல், அரசு கட்டிடங்கள் கட்டுதல், மினி டேங்க் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் மனசாட்சியுடன் செயல்பட்டால் எதுவும் சம்பாதிக்க முடியாது.  நஷ்டம் தான் ஏற்படும். இந்த மாதிரி வேலைகளில் மண்ணை வாரி கொட்டி, மக்களை ஏமாற்றினால் மட்டும்தான் நாலு காசு பார்க்க முடியும்"  என்று பேசிக் கொள்கின்றனர். 

மேலும் அரசு பணிகளை வாங்குவதற்கு கீழ்மட்ட அதிகாரி முதல் உயர்மட்ட அதிகாரிகள் என அனைவருக்கும் கையூட்டு கொடுப்பதாகவும், அவ்வாறு  வாங்கப்படும் வேலைகளை, ஒழுங்காக செய்தால் குடும்பத்தோடு விஷமருந்து அருந்துவதற்கு சமம் என்றும், முறைகேடாக பணி செய்தால் மட்டும்தான் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்றும் அதற்கு உண்டான வழிகளை நான் சொல்லி தருகிறேன் என்று ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் கூறுகிறார். 

மேலும் அக்கிராமத்தில் உள்ள பாஸ்கர் என்பவர் பல்வேறு முறைகேடுகள் செய்து வேலைகளை முடித்ததினால் தான் தற்போது எவ்வித நஷ்டம் ஏற்படாமல் லாபம் பார்த்திருக்கிறார் என்றும் உரையாடலில் தெரிவிக்கிறார். அக்கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு சில வருடங்களிலேயே முற்றிலுமாக இடிந்து விழுவது போல் உள்ளது என்றும், அவ்வாறு பணிகள் செய்தால் மட்டும்தான் லாபம் பார்க்க முடியும்"  என்றும் கூறுகிறார். 

இதுகுறித்து நடைபெறும் அனைத்து ஊழல்கள் பற்றி திட்ட இயக்குனர், உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நக்கீரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments