இயல்பு நிலைக்கு திரும்பும் சவூதி அரேபியா..!! மசூதிகளில் தொழுவதற்கு அனுமதி..!! இயக்க கட்டுப்பாடுகளில் தளர்வு..!!கொரோனா வைரஸ் பரவலை தெடர்ந்து சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் இயக்க கட்டுப்பாடு, ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட இருப்பதாக சவுதி அரேபியாவின் செய்தி நிறுவனம் இன்று (மே 26) செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


தற்போது அமலில் இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மூன்று கட்டங்களாக நீக்கப்படும் என்றும், புனித நகரமான மக்காவைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 21 முதல் முற்றிலுமாக முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களில் சவூதி அரேபியா அதன் பெரும்பாலான நகரங்களுக்கு 24 மணி நேர ஊரடங்கு உத்தரவுகளை விதித்திருந்தது. ரமலான் மாதம் தொடங்கியதை தொடர்ந்து தளர்த்தப்பட்ட இந்த ஊரடங்கானது, ஈத் விடுமுறையை முன்னிட்டு சவுதி அரேபியா முழுவதும் மறுபடியும் நாடு தழுவிய 24 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டம்:-

சவுதி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல் கட்டமாக மே 28 ஆம் தேதி வியாழக்கிழமையிலிருந்து, சவுதி முழுவதும் அமலில் இருக்கும் 24 மணி நேர ஊரடங்கு, மக்கா நகரை தவிர்த்து சவூதி அரேபியாவின் மற்ற நகரங்களில் பிற்பகல் 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை, அதாவது 15 மணி நேரங்களாக குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் சவுதி அரேபியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த, மற்ற பிராந்தியங்களுக்கு இடையேயான பயண போக்குவரத்து மற்றும் நடமாட்டம் மீதான தடை நீக்கப்படும்.

மால்கள் உள்ளிட்ட சில சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் போன்றவை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும்.

இரண்டாம் கட்டம்:-

அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக, மே 31 ஞாயிற்றுக்கிழமையில் இருந்து, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மக்கா நகரை தவிர்த்து சவூதி அரேபியாவின் மற்ற நகரங்களில் மக்கள் நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும். ஆனால் சர்வதேச விமான சேவைகள் மீதான தடை தொடர்ந்து நீடிக்கும்.

புனித நகரமான மக்காவை தவிர சவூதியின் பிற நகரங்களில் இருக்கக்கூடிய அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை பிராத்தனை உள்ளிட்ட ஐவேளை தொழுகையையும் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடவடிக்கைகளுடன் மீண்டும் தொடர முடியும்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணிபுரிவதற்காக தங்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

மூன்றாம் கட்டம்:-

மூன்றாம் கட்டமாக, மக்கா நகரத்தில் மட்டும் ஊரடங்கு உத்தரவானது ஜூன் 20 ஆம் தேதி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையிலும் கடைபிடிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 21 முதல் ஊரடங்கு நேரம் மாற்றியமைக்கப்பட்டு இரவு 8 மணி வரையிலும் மக்கள் நடமாட அனுமதிக்கப்படும்.

மக்கா மசூதிகளில் மேற்கொள்ளப்படும் கூட்டு பிரார்த்தனைகள் ஜூன் 21 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும்.

இருப்பினும் உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான பயணிகளை ஈர்க்கும் உம்ரா யாத்திரை மீதான தடை மறு அறிவிப்பு வரும் வரையிலும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 21 க்குப் பிறகு முழு ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னரும், பொதுவெளியில் கூடும் மக்கள் முகக்கவசங்களை அணியவும், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடரவும் குடிமக்கள் வலியுறுத்தப்படுவார்கள் எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments