புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் விசைப்படகு மீனவர்கள் 13-ந் தேதி கடலுக்கு செல்ல முடிவு.!தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 13-ந் தேதி முதல் கடலுக்கு செல்வது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய கடல் பகுதியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு விசைப்படகுகள் வாரத்தில் 3 நாட்களும், நாட்டுப்படகுகள் 4 நாட்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனை மீறி நாட்டுப்படகு மீனவர்கள் எல்லா நாட்களிலும் மீன்பிடிக்க செல்வதால் விசைப்படகு மீனவர்களுக்கு தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைத்து விசைப்படகுகள் தங்கு தடையின்றி மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும்.

மீனவர்கள் நலனுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அரசுகள் கூறிவரும் நிலையில், கடைசி மீனவனும் பயன்பெறும் வகையில் அவரவர் தொழிலுக்கு ஏற்றவாறு நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்களை வட்டியில்லாமல் வங்கிகள் மூலம் வழங்க வேண்டும்.

மீனவர் வாழ்வு மேம்பட சரக்குகளை பாதுகாத்து வைத்து முறையாக சந்தைப்படுத்திட ஏதுவாக குளிர்பதன கிடங்குகள் அமைத்து தரவேண்டும். மல்லிப்பட்டினம் புதிய துறைமுகத்தில் காற்றின் வேகத்தால் விசைப்படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடையும் நிலை உள்ளது. எனவே தூண்டில் வளைவு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடைக்காலம் முடிந்து அரசு ஏற்கனவே கடந்த 1-ந் தேதி முதல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கி இருந்தாலும், பொருளாதார பிரச்சினை, தொழிலாளர் தட்டுப்பாடு, உபகரணங்கள் கிடைக்காதது ஆகியவற்றால் படகுகள் மராமத்து பணியில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

எனவே அனைத்து பணிகளும் முடித்து வருகிற 13-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு பொது செயலாளர் என்.ஜே.போஸ், ராமேசுவரம் அனைத்து மீனவர் சங்க செயலாளர் ஜே.சு.ராஜா, மண்டபம் மீனவர் சங்கங்களின் தலைவர்கள் ஜாகீர் உசேன், பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் வடக்கு மீனவர் கூட்டமைப்பு நிர்வாகி சோழியக்குடி கோபி, புதுகை மீனவர் சங்க நிர்வாகிகள் கோட்டைப்பட்டினம் சின்ன அடைக்கலம், ஜெகதாப்பட்டினம் பாலமுருகன், தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் வடுகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments