காணாமல் போன தாயை 2 ஆண்டுக்கு பின் சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்த மகன்..!சென்னையைச் சேர்ந்த சாந்தி என்பவர், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வழிதவறி ஈரோட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு, எங்கு செல்வது என்று தெரியாமல் சாலைகளில் சுற்றிய வசந்தியின் நிலை அறிந்த தன்னார்வலர்கள், புதுக்கோட்டையில் உள்ள 'நேசக்கரம்' ஆதரவற்றோர் இல்லத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.


கடந்த 2வருடங்களாக சாந்தி, நேசக்கரம் இல்லத்தின் பாதுகாப்பிலிருந்து வந்தார். சமூக வலைதளம் மூலம் சாந்தி இருப்பதைத் தெரிந்துகொண்ட அவரது மகன் அரவிந்த், அதே சமூக வலைதளம் மூலம் நேசக்கரம் இல்லத்தைத் தொடர்புகொண்டு, பிரிந்த தன் தாயை மறுபடியும் வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். ஊரடங்கு நேரத்திலும் தன் தாயைத் தேடி சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்து, தாயை அழைத்துச்சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி நேசக்கரம் ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகி மகேஸ்வரி கூறும்போது, " 2 வருஷத்துக்கு முன்னால எனக்கு ஒரு அழைப்பு வந்துச்சு. ஈரோட்டுல மனநலம் பாதிச்ச பெண் ஒருத்தங்க இருக்காங்க. உங்க இல்லத்துல சேர்த்துக்கலாமான்னு கேட்டாங்க. யாரு என்னவென்று எல்லாம் தெரியாது. உடனே நம்ம இல்லத்துக்கு கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டேன். அவங்களும் உடனே கொண்டுவந்து விட்டுட்டாங்க. 

மனநலம் பாதிப்பு இருக்குன்னு சொன்னதால, மனநல சிகிச்சை கொடுத்தோம். ஆனாலும், பெரிசா முன்னேற்றம் இல்லை. ஊரு எதுன்னு தெரிஞ்சிக்க பலமுறை முயற்சி பண்ணினேன். ஆனாலும், தெரிஞ்சுக்க முடியலை. பெயர் மட்டும் தெரிஞ்சிக்கிட்டோம்.

வழக்கமா, எங்க இல்லத்தில நடக்கின்ற நிகழ்வுகளை எல்லாம் வாட்ஸ்அப், முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள்ல பதிவேற்றுவோம். அப்படி எங்க நிகழ்ச்சியைப் பார்த்த சென்னையைச் சேர்ந்த பையன் அரவிந்த் போன் செய்து, எங்க இல்லத்தில அவங்க அம்மா சாந்தி இருக்கிறதா சொன்னான். யாருன்னே தெரியாம இருந்தோம். அவங்க யாருன்னு தெரிஞ்சிருச்சு. ஒருபக்கம் சந்தோஷம்தான். 

அதேநேரத்துல உண்மையாக அவங்க அம்மாவான்னு தெரிஞ்சக்கணும்ல. அவங்க சொன்ன அடையாளங்கள் எல்லாம் சரியா இருந்துச்சு. நாங்க புதுக்கோட்டைக்கு வந்து அம்மாவ கூட்டிக்கிட்டு போறோம்னு சொன்னாங்க. இப்போ வேண்டாம், கொரோனா பிரச்னை முடிஞ்சு கூட்டிக்கிட்டு போங்கன்னு சொன்னேன். ஆனா, அவங்க இ-பாஸ் எடுத்து, பாதுகாப்புடன் வந்து சாந்தியம்மாவை கூட்டிக்கிட்டு போயிட்டாங்க.

சாந்தியம்மா இங்க இருந்த வரைக்கும் யாருக்கும் தொந்தரவு கொடுக்கல. அவங்க போனது எங்களுக்கு கஷ்டம்தான். ஆனாலும், உரியவரிடம் ஒப்படைத்துவிட்டோம்கிற திருப்தி இருக்கு" என்றார் நெகிழ்ச்சியுடன்.

இதுபற்றி சாந்தியம்மாவின் மகன் அரவிந்த் கூறும்போது, "அம்மா தொலைந்ததிலிருந்து தேடாத இடமில்லை. தேடாத நாளில்லை. போலீஸிலும் புகார் கொடுத்திருந்தோம். அம்மா எங்கேயாவது உயிரோடு இருப்பாங்கன்னு மட்டும் தோணுச்சு. இப்போ, அம்மா கெடச்சிட்டாங்க. எங்கேயும் விடாம இனி பக்கத்திலே வச்சுப் பார்த்துக்குவோம். அம்மாவ பாதுகாத்த நேசக்கரம் இல்லத்தை என்னைக்கும் மறக்க மாட்டோம்" என்றார் நெகிழ்ச்சியோடு.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments