புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமீறல்: 16 ஆயிரம் பேர் கைது.! ரூ.3¼ லட்சம் அபராதம் வசூல்.!



கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. 5-வது கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிப்பானது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.முக கவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களை பிடித்து எச்சரித்து மோட்டார் வாகன வழக்கில் அபராதம் விதிக்கின்றனர். 

மேலும் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் கடைவீதியில் மக்கள் தினமும் அலை, அலையாய் வருகிறார்கள். தெற்கு ராஜ வீதியில் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்படுகிறது.

கொரோனா பற்றிய பயம் அறியாமலேயே பலர் சுற்றித்திரிகின்றனர். முக கவசமும் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் பலர் கடைப்பிடிப்பதில்லை. அரசு எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை பலர் பின்பற்றுவதில்லை. 

மாவட்டத்தில் ஊரடங்கில் விதிமுறை களை மீறியதாக பல்வேறு வழக்குகளில் இதுவரை 16 ஆயிரத்து 9 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 370 இரு சக்கர வாகனங்களும், 335 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அபராதமாக விதிக்கப்பட்டதில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்து 620 வசூலாகி உள்ளது.

இதுதவிர மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து, 8 ஆயிரத்து 89 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 2,664 லிட்டர் சாராயமும், 18,525 லிட்டர் சாராய ஊறலும் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments