புதுக்கோட்டை மாவட்டத்தில் முகக்கவசமின்றி கடைக்கு வரும் பொது மக்களுக்கு வணிகர்கள் பொருட்கள் விற்பனை செய்யத் தடை – கலெக்டர் அதிரடி உத்தரவுபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் இன்று (22.06.2020) வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இதில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்றரை மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி பொது மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்ட வணிகர் சங்கங்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வணிகர்கள், வணிகர் சங்க உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் போன்றோரின் பாதுகாப்பை சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிய செய்தும் முறையாக கடைப்பிடித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் வணிகர் சங்கங்கள் கடை திறக்கும் நேரத்தில் ஏதேனும் மாற்றம் செய்தால் அதுகுறித்து தகவலை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்து தடையின்றி பொருட்கள் கிடைக்கச் செய்வதுடன், ஒரே நேரத்தில் கூட்டம் கூடாமல் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.

மேலும் முகக்கவசம் அணிந்து வராத பொது மக்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது. இது போன்று அரசால் தெரிவிக்கப்டும் விதிமுறைகளை தொடர்ந்து மீறும் கடைகளில் உரிமத்தை ரத்து செய்ய பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பொது மக்களுக்கு தேவையான பொருட்களை வாடிக்கையாளர்களே எடுத்து வழங்கிட வணிகர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

வணிகர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன்ரூபவ் நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர்கள், பிரதிநிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments