கொரோனாவால் இறந்தோரின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம் தன்னார்வலர்கள்.!கொரோனாவால் புதுச்சேரியில் மரணங்கள் தொடரும் நிலையில் இறுதிக் காரியங்களைச் செய்து வரும் முஸ்லிம் தன்னார்வலர்கள் அதன்பிறகு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.


தற்போது இறுதிக் காரியங்களுக்காகப் பயன்படுத்தும் வழக்கமான ஆம்புலன்ஸுக்குப் பதிலாக தனி வாகனத்தைப் பயன்படுத்துகின்றனர்.


புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. அவரது இறுதிக் காரியத்தின்போது அவரது சடலம், சவக்குழியில் வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதிக் காரியத்தில் நால்வர் பங்கேற்றிருந்தாலும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் இருவர், சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் என மூவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் இறப்போரின் உடலை அவரவர் மத அடிப்படையில் அரசுடன் இணைந்து இறுதிக் காரியங்களைச் செய்ய பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் முன்வந்தனர். அவர்களுக்கு அரசு அனுமதிக் கடிதமும் தந்தது.அதைத்தொடர்ந்து விழுப்புரத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர், புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த முதியவர், முதலியார்பேட்டையைச் சேர்ந்த முதியவர், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்தவர் என நால்வரின் இறுதிச் சடங்குகளை இந்து முறைப்படி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு முஸ்லிம்கள் செய்துள்ளனர்.இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் புதுச்சேரி பகுதித் தலைவர் அஹமது அலி கூறுகையில், "இறுதிக் காரியங்களை அரசு தந்த கரோனா பாதுகாப்புக் கவச உடையுடன் செய்தோம். இந்து முறைப்படி தகனம் நடந்தது. ஒவ்வொரு இறுதிக் காரியத்தில் ஈடுபடும் நான்கு தன்னார்வலர்களும் தாங்களாகவே முன்வந்து தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். அதையடுத்து அடுத்த குழுவினர் இறுதிக் காரியங்களில் ஈடுபடுவார்கள். நான்கு இறுதிக் காரியங்களில் ஈடுபட்ட 16 பேரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கின்றனர்.தன்னார்வலர்கள் 20 பேரை இப்பணிக்காகத் தேர்வு செய்து வைத்துள்ளோம். அவர்களின் உயிருக்கு, பாதுகாப்புத் தரவே தனிமைப்படுத்திக் கொள்வதைக் கட்டாயமாகச் செய்கிறோம். தன்னார்வலர்கள் பணிக்கு வருவோர் அனைவரும் சாதாரண வேலைகளில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தோர்தான்.நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழக்கமான ஆம்புலன்ஸுக்கு மாற்றாக வேறு வாகனத்தை இறுதிக் காரியங்களுக்குப் பயன்படுத்துகிறோம். ஏனெனில் மக்கள் தொடர்ந்து எங்கள் இலவச ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தவே இம்முறையைக் கையாள்கிறோம். இறுதிச் சடங்குக்குப் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்றுவது மிகக் கடினமானது" என்று குறிப்பிட்டார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments