`கொரோனாவால் உயிரிழந்த சென்னை இன்ஸ்பெக்டர்!'- முதல் மரணத்தால் அதிர்ச்சியில் தமிழகக் காவல்துறை.!



கொரோனாவால் தமிழக காவல்துறையில் முதல் உயிர் இழப்பை சென்னை பதிவு செய்துள்ளது.


கடந்த 5-ம் தேதி காய்ச்சல் காரணமாக சென்னை மாம்பலம் காவல் நிலைய, சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி விடுதியில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

பிறகு 2 நாட்களிலேயே தொடர்ந்து காய்ச்சல் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உடனே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாலமுரளி அனுமதிக்கப்பட்டார். ஆனால் கடந்த 13-ம்தேதி உடல் நிலை மோசமானது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது சொந்த செலவில் ரூ.2.25 லட்சத்துக்கு மருந்தை வாங்கிக் கொடுத்தார். உரிய சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

அதன் பிறகு பாலமுரளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது உடல் நிலையை தனியாக மருத்துவ குழு ஒன்று கண்காணித்து வந்தது. ஆனால் நேற்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து பாலமுரளி நேற்று மாலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.

வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த அவருக்கு மனைவி, 8-வது படிக்கும் மகள், 4-வது படிக்கும் மகன் உள்ளனர். சொந்த ஊர் வேலூர். இறந்து போன பாலமுரளியின் தந்தையும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பாலமுரளி 2000-ம் ஆண்டு காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தவர். சென்னையில் நீலாங்கரை, கேகே நகர், எம்.கே.பி.நகர், மாம்பலம் காவல் நிலையங்களில் உள்பட பல காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர். சட்டம்-ஒழுங்கு பணியை சிறப்பாக செய்வதில் திறமை வாய்ந்தவர் என்றும் மனிநேயத்துடன் செயலாற்றுபவர் என்றும் அவருடன் பணியாற்றும் காவலர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

சென்னை காவல்துறையில் இதுவரை கொரோனாவால் 731 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். 278 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments