தமிழகத்தில் தொடரும் தீண்டாமை.! ஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட வைப்பதா? தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!



திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ளது அரியாகுஞ்சூர் ஊராட்சி. பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி அது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அரியாகுஞ்சூர் ஊராட்சித் தலைவராக பழங்குடி இருளர் சமூகத்தை சார்ந்த முருகேசன் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் பஞ்சாத்து ராஜ் சட்டப்படி இட ஒதுக்கீட்டுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் தேர்வு செய்யப்படுகிற பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பல இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சி தலைவர்கள் மீது மிக கொடூரமான தீண்டாமை கொடுமைகள் ஏவிவிடப்படுகின்றன.

ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்படுகிறவர்கள் திருவிழாவிற்கு தப்படிக்க வேண்டும், ஊர் வேலை செய்ய வேண்டும், தலைவர் நாற்காலியில் அமரக்கூடாது, தேசியக் கொடி ஏற்றக்கூடாது, கிராமசபை கூட்டத்தில் பேசக்கூடாது, இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது, பெயர் பலகைகளில் தலைவர் பெயரை  சிறியதாகவும் துணைத் தலைவர் பெயரை பெரியதாகவும் எழுதி வைப்பது, நிர்வாகத்தில் ஒரு துளிகூட பங்குதர மறுப்பது என்பதாக தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இக்கொடுமைகளின் உச்சகட்டமாகவே ஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட வைத்து வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் இத்தகைய கொடுமை எங்குமே நிகழ்த்தப்பட்டிருக்காது. இக்கொடுமை தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. 

இக்கொடுமை நடந்த கிராமத்திற்கு உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக சென்று வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்படுவதையும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும். அரியாகுஞ்சூர் ஊராட்சி நிர்வாகத்தை சட்டப்படி ஜனநாயகப்படுத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments