மேற்பனைக்காடு அருகே கல்லணைக் கால்வாயில் உடைப்பு: எலி துளையால் உடைப்பு ஏற்பட்டதாக அலுவலர் தகவல்.!



புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு அருகே கல்லணைக் கால்வாயில் இன்று உடைப்பு ஏற்பட்டதால் கடைமடைக்குத் தண்ணீர் செல்லவில்லை.


நிகழ் ஆண்டு பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி தண்ணீரை தமிழக முதல்வர் பழனிசாமி ஜூன் 12-ம் தேதி திறந்து வைத்தார். பின்னர், கல்லணையில் இருந்து கிளை வாய்க்கால்களில் 16-ம் தேதி திறந்துவிடப்பட்டது. அதில், கல்லணைக் கால்வாய் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நேற்று தண்ணீர் வந்தது. இதையடுத்து, நெடுவாசல், வேம்பங்குடி, மேற்பனைக்காடு போன்ற இடங்களில் விவசாயிகள் மலர், நெல் மணிகளைத் தூவி வரவேற்றனர்.

இந்நிலையில், மேற்பனைக்காடு கதவணையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டருக்கும் முன்னதாக, வேம்பங்குடி கிழக்கு பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சுமார் 50 அடி நீளத்துக்கு கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் வயல் பகுதியெங்கும் தண்ணீர் பெருகி காணப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டரில் உள்ள ஈச்சவிடுதி, வெட்டிக்காடு, சூரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் செல்லும் கிளை வாய்க்கால்களில் கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பின்னர், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மரக்கட்டைகளை நட்டு, 2 வரிசையாக சாரம் அமைக்கப்பட்டது. அதற்கும் இடையில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. 2 முறை தண்ணீரில் சாரம் இழுத்துச் செல்லப்பட்டதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டோர் இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன் கூறியபோது, ''கால்வாய் தூர்வாரியபோது வெட்டப்பட்ட சீமைக் கருவேல மரங்களின் வேர் பகுதிகள் அகற்றப்படாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. தற்போது கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடைமடைக்குத் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சீரமைப்பு பணிக்கும் இயந்திர ரம்பம் போன்ற உபகரணங்கள் இல்லாததால் பணியில் தொய்வு ஏற்பட்டது'' என்றார்.

இதுகுறித்து கல்லணைக் கால்வாய் செயற்பொறியாளர் முருகேசன் கூறுகையில், ''வேம்பங்குடி பகுதியில் சுமார் 300 கனஅடி தண்ணீர் சென்றுகொண்டிருந்தபோது உடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக தண்ணீர் குறைக்கப்பட்டது. பின்னர், கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு நாளில் பணி முடிக்கப்பட்டு, மீண்டும் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.

இதுகுறித்து கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் கூறுகையில், ''எலி துளை வழியாக தண்ணீர் சென்றதால்தான் கரை உடைப்பு ஏற்பட்டது'' என்றார்.







கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments