உள்ளாட்சி அமைப்பு முறைகேடுகளை விசாரிக்க நடுவரை நியமிக்க கோரி வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!



தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகள், ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்துக்கு நடுவரை நியமிக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மத்திய அரசு, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் சட்டம் நிறைவேற்றியது. அதேபோல, அந்தந்த மாநிலங்களில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர் முதல் பஞ்சாயத்துத் தலைவர், உறுப்பினர்கள் வரையிலான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 2014-ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் அமைக்கப்பட்டது.

இந்த நடுவத்தின் நடுவராக முதலில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சோ.அய்யர், கடந்த மார்ச் மாதம் வரை இப்பதவியில் நீடித்தார். தற்போது, இப்பதவி காலியாக உள்ளது. இப்பதவிக்கு தகுதியானவர்களை முதல்வர் பரிந்துரைக்க, ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும்.

தற்போது பதவி காலியாக உள்ளதாலும், ஏராளமான முறைகேடு புகார்கள் நிலுவையில் உள்ளதாலும் நடுவரை நியமிக்கும்படி ஆளுநரின் செயலருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி அன்பழகன் என்ற பத்திரிகையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் ஏராளமான அளவில் நிலுவையில் இருப்பதாகவும், இதுவரை எந்த அதிகாரியின் பெயரும் நடுவராகப் பரிந்துரைக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

கரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அதிகாரிகளும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனுவை நேற்று (ஜூன் 24) விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments