புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடையில் புதர் மண்டி கிடக்கும் வாய்க்கால்கள்: தண்ணீர் வருவதில் சிக்கல், விவசாயிகள் கவலை.!



பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அறந்தாங்கி பகுதியில் உள்ள வாய்க்கால்கள் முட்புதர் மண்டி கிடக்கிறது. இதனால் கடைமடைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதிகளில் 110 ஏரிகள் மூலம் சுமார் 22 ஆயிரம் ஏக்கரில் காவிரி பாசனம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போதுமான தண்ணீர் வந்ததாலும், தேவையான அளவு மழை பெய்ததாலும் விவசாயம் முழுமையாக நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு சாகுபடிக்காக விவசாயிகள் தங்கள் வயல்களை செம்மைப்படுத்தி வைத்துள்ளனர். மேட்டூர் அணையில் சுமார் 99 அடி தண்ணீர் உள்ளதால், இந்த ஆண்டு பாசனத்திற்காக ஜூன் மாதம் 12ம் தேதி அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

மேட்டூர் அணை திறக்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் பொதுப்பணித்துறை கல்லணைக் கால்வாய் கோட்ட நாகுடி பிரிவில், இந்த ஆண்டு தூர்வாரும் பணி செய்யப்பட்ட வாய்க்கால்களை தவிர மற்ற வாய்க்கால்கள் மற்றும் கரை ஓரங்களில் சீமைக்கருவேலமரங்கள் உள்ளிட்ட பல்வேறு புதர்கள் வளர்ந்துள்ளன.

இந்த புதர்களை பொதுப்பணித்துறையினர் ஆண்டுதோறும் பணியாளர்கள் மூலம் அகற்றுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை வாய்க்கால்களில் படர்ந்துள்ள புதர்களை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனால் வாய்க்கால்களில் தண்ணீர் வரும் போது தடைகள் ஏற்பட்டு, கரைகள் உடையும் அபாயம் உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் தண்ணீர் திறப்பதற்குள் உடனடியாக வாய்க்கால்களில் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் ஆண்டுதோறும் பிரிவு வாய்க்கால்களில் படர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். 

ஆனால் நாகுடி பிரிவில் தற்போது கலக்கமங்கலம் வாய்க்கால் உள்ளிட்ட பல வாய்க்கால்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் தெரிவித்தபோதிலும், இதுவரை புதர்கள் அகற்றப்படவில்லை. பொதுப்பணித்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments