கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரக்கூடாது! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை.!நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வருவது என மத்திய அமைச்சரவை எடுத்திருக்கும்  முடிவு அதிர்ச்சியளிக்கிறது.


மாநில அரசுகளின் பட்டியலில் உள்ள கூட்டுறவு வங்கிகளை கைப்பற்ற நினைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். 

மாநில அரசுகளிடம் எஞ்சி நிற்கும் ஒரு சில உரிமைகளையும் மத்திய அரசு பறிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.

கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும், கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்கான வாசல் படிகளாகவும் உள்ளன.

மாநில கூட்டுறவு துறை மூலம் செயல்படுத்தப்படும் இதன் நிர்வாக முடிவுகளை இனி மாநில அரசுகளே எடுக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.

வங்கிகளில் பன்னாட்டு முதலீடுகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியும் கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது.

எனவே விவசாயிகளின் பங்களிப்புடன், உழைக்கும் கிராமப்புற மக்களால் செழிப்புற்றிருக்கும் கூட்டுறவு வங்கிகளின் ஜனநாயக உரிமைகளை இழக்க அனுமதிப்பது விவசாயிகளின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சமமாகும். இதன் மூலம் கிராமிய பொருளாதாரம் நலிவடையும் ஆபத்தும் இருக்கிறது.

எனவே, இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும், கிராமப்புற மக்களின் நலனையும், கூட்டாட்சி தத்துவத்தையும் மதிக்கும் வகையில் மத்திய அரசு இம்முடிவை கைவிட வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
25.06.2020
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments