புதுக்கோட்டை: `2 கோடி கொடுத்தால் விட்டுவிடுவோம்!' -கொல்லப்பட்ட தொழிலதிபர்



புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர், தவமணி (50). இவர் சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகளுக்கு உள்கட்டமைப்பை வடிவமைத்துத் தரும் தொழிலைச் செய்து வந்தார்.


இவை தவிர, கறம்பக்குடியில் தொகுப்பு வீடுகள் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். சென்னையிலும் இவருக்கு வீடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கந்தர்வகோட்டை அருகே உள்ள வெள்ளாள விடுதி கிராமத்தில் இவருக்கு, தோட்டங்களுடன் கூடிய பண்ணை வீடு ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு பண்ணை வீட்டுக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மனைவி சந்திரா மற்றும் உறவினர்கள், பண்ணை வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டில் மிளாய்ப் பொடி ஆங்காங்கே சிதறிக்கிடந்துள்ளது. இதையடுத்து, தன் கணவரை மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடியைக் கண்ணில் தூவி, கடத்திச் சென்றுவிட்டனர். அவர்களைக் கைது செய்து, கணவரை மீட்டுத் தர வேண்டும் என கந்தர்வகோட்டை போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.


புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரித்துவந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தவமணியின் அலைபேசியிலிருந்து அவரது மனைவி சந்திராவின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.

கணவர்தான் பேசுகிறார் என்று போனை எடுத்திருக்கிறார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், `உன் புருஷன் எங்க கஷ்டடியிலதான் இருக்கான். 2 கோடி பணம் கொடுத்தா விடுவித்து விடுவோம்' என்று கூறிவிட்டு போனைத் துண்டித்துவிட்டனர். மேலும், பணம் கேட்டு அடுத்தடுத்து குறுஞ்செய்திகளும் வந்துள்ளன. ஒரு வாரத்துக்கு மேலாகியும் தவமணியைப் பற்றி துப்பு கிடைக்காமல் போலீஸாரும் திணறிவந்தனர்.

இதையடுத்து, மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார், டிஎஸ்பி கோபால சந்திரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக, தனிப்படை போலீஸார் தவமணியின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரிடமும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தற்போது கல்லணைக் காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் தவமணியின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments