ஏம்பல் சிறுமி கொலை – முதல்வர் அறிவித்த நிவாரண உதவித் தொகையினை வழங்கி மாவட்ட கலெக்டர் ஆறுதல்



ஏம்பலில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவித் தொகையினை வழங்கி மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி ஆறுதல் தெரிவித்தார்.


புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி இன்று (03.07.2020) புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்த சிறுமி ஜெயபிரியாவின் உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவித்தொகையினை வழங்கினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் வருவாய் கிராமம், அம்மன் கோவில் தெரு மேலக்குடியிருப்பை சேர்ந்த நாகூரான் என்பவரது மகள் ஜெயப்பிரியா 01.07.2020 அன்று மாலை வண்ணாங்குளம் ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரியவந்த உடன் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சிறுமியின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.5 லட்சம் வழங்கவும் நேற்றைய தினம் உத்தரவிட்டார். அந்தவகையில் இன்றைய தினம் இச்சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியின் கீழ் ரூ.5 லட்சமும் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தீர் உதவித்தொகையின் முதல் தவணையாக ரூ.4,12,500 ம் என மொத்தம் ரூ.9,12,500 நிதி உதவித்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மற்றும் நிவாரணம் வழங்குவதற்காக மகிளா நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இக்குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா மற்றும் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழக அரசின் 181 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு மகளிருக்கு எதிராக நடக்கும் எந்த வன்கொடுமை புகாரையும் தெரிவிக்கலாம். இதுதவிர 1098 என்ற எண்ணில் 24 மணிநேரமும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பொது மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இதன்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சமூகநலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதுதவிர பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்குவதுடன் குழந்தைகளை பாதுகாப்பாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments