கந்தர்வகோட்டை அருகே தொழிலதிபர் கொலை: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்.!கந்தர்வகோட்டை அருகே தொழிலதிபர் கொலை வழக்கில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் முன்விரோதத்தில் தொழிலதிபரை கொன்று உடல் ஆற்றில் வீசப்பட்டது தெரியவந்தது.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வெள்ளாளவிடுதியை சேர்ந்தவர் தவமணி(வயது 50). இவரை கடந்த மாதம் 18-ந் தேதி சிலர் கடத்தி சென்றனர். இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புதுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால்சந்திரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தவமணியின் உறவினரான கமல்ஹாசன்(30) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் மேலும் 2 பேரோடு சேர்ந்து தவமணியை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் உள்பட 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்தனர். இதில் கமல்ஹாசன் அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கமல்ஹாசன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது;-

கமல்ஹாசனுக்கு சொந்தமான நிலங்களுக்கு அருகில் உள்ள நிலங்களை தவமணி கூடுதல் விலை கொடுத்து வாங்கியுள்ளார். இதனாலும், கோவில் கட்டியது போன்ற பல்வேறு காரணங்களாலும் கமல்ஹாசனுக்கும், தவமணிக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவரை தீர்த்துக்கட்ட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதையடுத்து கமல்ஹாசன் தனது அக்காள் மகனான மெய்குடிப்பட்டியை சேர்ந்த அன்பழகனின் மகன் கோகுலன்(20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரோடு சேர்ந்து பல நாட்களாக தவமணியின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர்.

சம்பவத்தன்று தவமணி வயலுக்கு சென்றபோது பின் தொடர்ந்து சென்ற அவர்கள், அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் தவமணியின் கை, கால்களை கட்டி, முகத்தை துணியால் மூடியுள்ளனர். இதையடுத்து அவருடைய உடலை கமல்ஹாசனுக்கு சொந்தமான காரில் இருக்கைக்கு அடியில் வைத்து கல்லாக்கோட்டை, ரெகுநாதபுரம் வழியாக தூக்கிச்சென்று கல்லணை அருகே உள்ள தோகூருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு காரில் இருந்து உடலை எடுத்து வெண்ணாற்றில் வீசிவிட்டு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கமல்ஹாசனின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கமல்ஹாசன், கோகுலன் ஆகியோர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன், திருச்சி சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

தவமணியின் உடலை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையொட்டி பொதுப்பணித்துறை உதவியோடு ஆற்றுக்கு வரும் தண்ணீரை அடைத்து, அப்பகுதியில் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments