துணை கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகள் வாசிமா ஷேக்.!



மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளியின் மகள், பல்வேறு தடங்கல்களையும் தாண்டி துணை கலெக்டராகி சாதித்திருக்கிறார். அதற்காக அவரது ஒட்டுமொத்தக் குடும்பமே உறுதுணையாக நின்றிருக்கிறது, தியாகங்கள் செய்திருக்கிறது.


வாசிமா ஷேக் என்ற அந்தப் பெண், மராட்டிய மாநிலம் நான்தத் மாவட்டத்தில் உள்ள ஜோஷி சங்வி கிராமத்தைச் சேர்ந்தவர்.

வசதிகள் ஏதுமில்லாத வாசிமாவின் வீட்டில் பிரச்சினைகளுக்கு மட்டும் குறைவில்லை. அப்பா மனநலம் பாதிக்கப்பட்டவர், அம்மா விவசாயக் கூலித் தொழிலாளி, அண்ணன் ஆட்டோ ஓட்டுநர். இவர்கள் இருவரின் சொற்ப வருமானத்தில்தான் 8 பேர் சாப்பிட்டாக வேண்டும்.

வாசிமாவின் கிராமமும் மிகவும் பின்தங்கியது. கல்வியறிவின்மை, போதைப் பழக்கம், குழந்தைத் திருமணம், குடும்ப வன்முறை போன்றவற் றுக்குப் ‘புகழ்பெற்றது’. சமீபகாலம் வரை, இங்கு மின்சார வசதி கூட கிடையாது.

“இம்மாதிரியான சூழலில் ஒருவர் இரண்டு முடிவுகளில் ஒன்றைத்தான் எடுக்க முடியும். ஒன்று, பிரச்சினைகளில் அமிழ்ந்து போவது. இரண்டு, பாடுபட்டு உழைத்து, நிலைமையை மாற்றுவது. நான் இரண்டாவதைத் தேர்வு செய்தேன். எனக்கு எங்கம்மாவும் மூத்த அண்ணனும் பேராதரவு அளித்தனர்” என்கிறார் வாசிமா.

அவரது படிப்புச் செலவுக்காக, அம்மா விவசாயக் கூலித் தொழிலாளியாக உழைத்தார். அண்ணன் இம்ரான், பி.எஸ்சி., படிப்பை இரண்டாமாண்டில் இடைநிறுத்திவிட்டு வாடகை ஆட்டோ ஓட்டத் தொடங்கினார்.


‘பெண் பிள்ளைக்காக ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க? அவ படிச்சு பெரிசா என்ன சாதிக்கப் போறா?’ என்ற உறவினர்களின் பேச்சை எல்லாம் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

பள்ளி நாட்களிலேயே படிப்பில் சூரப்புலியான வாசிமா, கவுரவமான அரசுப் பணிக்குத்தான் செல்ல வேண்டும், அதுதான் தன்னுடைய நிலையையும், தன்னைச் சுற்றியுள்ளோரின் நிலையையும் மாற்றும் என்பதில் தெளிவாக இருந்தார்.

மேல்நிலைத் தேர்வில் தாலுகாவிலேயே முதலிடம் பிடித்த அவர், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

மராட்டிய மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வே தனது இலக்கு என்பதில் தீர்க்கமாக இருந்த வாசிமாவுக்கு, அதற்கான பயிற்சி நிலையக் கட்டணம் தான் பயமுறுத்தியது. அத்தேர்வுக்குத் தயாராவதற்கான அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ளவாவது அவர் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே 6 மாதம் மட்டும் பயிற்சி நிலையம் சென்றவர், பின்னர் தானாகப் படிக்கத் தொடங்கினார். முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள், தினசரி செய்தித்தாள் வாசிப்பிலும் கவனம் செலுத்தினார்.

தனது முதல் முயற்சியில் எழுத்துத் தேர்வில் வென்ற வாசிமா, நேர்முகத் தேர்வில் வெறும் 2 மதிப்பெண்களில் வெற்றியை நழுவ விட்டார். மீண்டும் ஓராண்டு காலப் போராட்டம்.

இரண்டாவது முறையில் வென்று, நாக்பூர் விற்பனை வரித்துறையில் இரண்டாம் நிலை அதிகாரியானார். பணிபுரிந்தபடியே தொடர்ந்து படித்து, மறுபடியும் அரசுப் பணியாளர் தேர்வெழுதி, மாநில அளவில் பெண்களில் மூன்றாமிடம் பிடித்தார். துணை கலெக்டர் ஆகியிருக்கிறார்.

ஒரு காலத்தில் இவரது படிப்புக்காக தனது படிப்பை இடைநிறுத்திய அண்ணனின் படிப்புக்குத் தற்போது வாசிமா உதவி செய்கிறார்.

“அரசுப் பணித் தேர்வில் வெற்றி பெற நினைக்கும் எவருக்கும், கடின உழைப்பும் தொடர் முயற்சியும் நிச்சயம் கைகொடுக்கும்!” என்கிறார், வெற்றிப்பெண் வாசிமா ஷேக்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments