மருத்துவப்படிப்பில் அரசு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு! சமூகநீதி பேண ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரிMLA அறிக்கை!மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதன்முதலில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2017-18 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. 

2018-19 ஆம் ஆண்டில் 4 மாணவர்களுக்கும்,  2019-20 ஆம் ஆண்டில் 5 மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையை மாற்றி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை தீர்மானித்து, அதற்கான அவசர சட்டத்தை கடந்த ஜூன் 15-ஆம் தேதி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

ஆளுநரின் ஒப்புதலுக்காக அவசர சட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஆளுநர் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படாமல் தாமதிக்கப்படுகிறது.. 

இது பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது.

அதேநேரத்தில், மிக முக்கியமான அவசர சட்டங்களை நிறைவேற்ற அரசு விரும்பும் போது, சட்ட ஆலோசனை என்ற பெயரில், ஆளுநர் தாமதம் செய்வது நியாயமல்ல. 

தமிழக அரசு இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் நீண்ட கலந்தாய்வு செய்து அதன் பிறகே இம்முடிவை எடுத்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை - எளிய, பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தான் நீதியாகும். அதற்கு தமிழக அரசு முன் முயற்சி எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

அந்த சமூக நீதி பேணப்பட, தமிழக அரசின் இந்த நல்ல முயற்சிக்கு ஆளுநர் துணையாக இருந்து, அந்த அவசர சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்!

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
04.07.2020
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments