ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி 9 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்..! டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல்.!



"ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்ல சொல்லி 9 முஸ்லிம்களை கொலை செய்துள்ளனர் என்று கோர்ட்டில் டெல்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக, கடந்த பிப்ரவரி மாதம், டெல்லியின் வடகிழக்கு பகுதியில் படுபயங்கரமான வன்முறை நடந்தது. மோசமான கலவரமும் ஏற்பட்டது. இந்துத்வ கும்பலால் வடகிழக்கு டெல்லியின் பெரும்பாலான பகுதி சூறையாடப்பட்டது.

அதேபோல, இஸ்லாமியர்களின் இருப்பிடம், மசூதிகள், தர்காக்கள் உள்ளிட்டவை குறிவைத்தும் சூறையாடப்பட்டது. இவ்வளவும் பட்டப்பகலில் தான் நடந்தது. அப்போது 9 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில், டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜடின் சர்மா, ரிஷாப் சவுத்ரி, விவேக் பஞ்சால், லோகேஷ் சோலங்கி, பங்கஜ் சர்மா உள்ளிட்ட 9 பேர் மீது, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் உள்ளதன் சுருக்கம் இதுதான்:

டெல்லியின் வடகிழக்கு பகுதியில், முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதத்தினரை பழிவாங்குவதற்காக, "கட்டார் இந்துத் ஏக்தா" என்ற வாட்ஸ் அப் குரூப்பை கடந்த 25-ம் தேதி உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் அதனை உருவாக்கியர் தலைமறைவாக உள்ளார். இந்த குரூப்பில் ஆரம்பத்தில் 125 பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஆனால், மார்ச், 8-ஆம் தேதி 47 பேர் குரூப்பை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், பிப்ரவரி 25-ஆம் தேதி காலை முதல், மறுநாள் இரவு வரை, ஆனந்த் விஹார், கங்கா விஹார் பகுதிகளில் முஸ்லிம்களை பிடித்து வம்பிழுத்துள்ளனர். "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்ல சொல்லி அவர்களை தாக்கியும் உள்ளனர்.

இதில், எந்த முஸ்லீம்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்லவில்லையோ, அவர்களை மிக கடுமையாக தாக்கி, கொன்றுவிட்டு, கழிவு நீர் கால்வாயில் சடலங்களை வீசியிருக்கிறார்கள்.. இதுபோல 9 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவரான லோகேஷ் சோலங்கி என்பவர் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி அந்த வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், "நான் லோகேஷ் சோலங்கி. இந்துக்கள் யாருக்கேனும் உதவி வேண்டுமானால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். என்னிட்ட ஆளுங்க இருக்காங்க. நிறைய ஆயுதமும் இருக்கு. நான் இப்பதான் பாகீரதி விஹார் பகுதியில், 2 முஸ்லிம்களை கொன்னுட்டு, சாக்கடையில் வீசிவிட்டு வந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இப்படி லோகேஷ் சோலங்கி மெசெஜ் அனுப்பியதுடன், அதை உடனே டெலிட் செய்துவிட்டு, அந்த குரூப்பில் இருந்தும் வெளியேறியிருக்கிறார். ஆனால் தீபக் சிங் என்ற இன்னொருவரின் போனில் இருந்து லோகேஷ் சோலங்கியின் இந்த மெசேஜ் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக விசாரிக்க ஜூலை 13-ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments