புதுக்கோட்டையில் ரூ 9 கோடி மதிப்பில் அதிநவீன பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்: அமைச்சர் விஜயபாஸ்கர்.!



மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டை நகராட்சி தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் புதிய பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்குப்பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழக முதல்வர் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். 

அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை நகராட்சி தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம்; ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.9.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள புதிய பூங்காவிற்கு இன்றையதினம் அடிக்கல் நாட்டி பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இப்பூங்கா 5 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இப்பூங்காவில் நடைபயிற்சி பாதை, சைக்கிள் டிராக், ஆண், பெண், முதியோர்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், இசை நீருற்று போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

இதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா, அறிவியல், கணித மற்றும் ஹெல்த் பூங்கா, பலவகையான விளையாட்டுக் கூடம், ஸ்கேட்டிங் பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வைபை ட்ரீ, திறந்தவெளி கலையரங்கம், யோகா பயிற்சி மேடை, புற்கலால் ஆன விலங்குகள் உருவம், உயர்மின் கோபுர விளக்கு, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அனைத்து வசதிகளுடன் கூடிய மாபெரும் பூங்காவாக அமைக்கப்பட உள்ளதுடன் தமிழகத்தின் முக்கியமான பூங்காவாகவும் இது அமையப்பெற உள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா நோயத்தொற்றை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்புப்போட்டு கழுவுதல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் த.ஜெயலெட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத்தலைவர் சேட் மற்றும் சம்பத்குமார், தங்கமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments