கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு பிளாஸ்மா தானம் செய்த எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிக்கு குவியும் பாராட்டு.!சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சமூக வலைதளங்களில் கோரிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திருவள்ளூரை சேர்ந்த மருத்துவரான தனது உறவினர் ஒருவர் கோவிட்-19 பாதிப்புக்குள்ளாகி, சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  நோய் தொற்று பாதிப்பு அதிகமாகி அவரது உடல்நிலை படிப்படியாக மோசமாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.


மேலும், அவரை காப்பாற்ற தற்போதைய நிலையில் அனைத்து வகையான சிகிச்சைகளை மேற்கொண்டாலும்,  நோயின் தாக்கத்தை குறைக்க கடைசியாக பிளாஸ்மா சிகிச்சைக்கு திட்டமிடுவதாக தெரிவித்த அவர், 'ஓ-பாசிடிவ்' குரூப் இரத்த வகை கொண்ட கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமானவர்கள்  யாரேனும் ஒருவர் பிளாஸ்மா தானத்திற்கு முன்வந்து உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், பிளாஸ்மா சிகிச்சை என்பது பெருமளவில் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், மேற்கண்ட மருத்துவரின் கோரிக்கைக்கு உதவிடும் வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்த ராயபுரம் பகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி அமீர் என்பவர், எஸ்.டி.பி.ஐ. வடசென்னை மாவட்ட நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான சோதனைகளுக்குப் பின்னர் பிளாஸ்மா தானம் செய்தார். எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் இத்தகைய மனிதநேய சேவைக்கு மருத்துவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை மனிதநேயத்தோடு நல்லடக்கம் செய்து வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், தற்போது பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்திருப்பதை கண்டு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments