அரிமளம் அருகே பரபரப்பு: `தேர்தல் பகை; இருதரப்பினரிடையே பயங்கர மோதல்.! வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு.!



புதுக்கோட்டை அருகே இருதரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதைத்தடுக்க போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த மோதலில் 10 பேர் காயமடைந்தனர். 15 பேர் கைது செய்யப்பட்டனர்.


புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை அடுத்த கே.புதுப்பட்டி அருகே உள்ள போசம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் பரமசிவம் (வயது 50), ஊர் அம்பலம் உடையப்பன் (55). இவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்தபோதும் கிராமத்தில் இருதரப்பாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் உடையப்பன் தரப்பினர் போட்டியிட்டனர். ஆனால் அவர்களுக்கு, பரமசிவம் தரப்பினர் ஆதரவு தராமல் மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்ததாக கூறப்படுகிறது.

உள்ளூரில் உள்ள வேட்பாளருக்கு ஆதரவு அளிக்காமல், வேறொரு ஊரை சேர்ந்த வேட்பாளரை ஆதரித்ததால் இருதரப்பினருக்கும் இடையே மனக்கசப்பு அதிகரித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் உடையப்பன் குறித்து தவறாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை ஊர் சார்பாக ஊர் அம்பலம் உடையப்பன் தரப்பினர் பரமசிவத்தின் மகன் சிவா, ராமையா மகன் ராஜாமணி, தென்னரசு ஆகியோரிடம் கேட்டுள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

அப்போது உடையப்பன் தரப்பினர், பரமசிவத்தை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி நேற்று முன்தினம் கே.புதுப்பட்டி போலீசில் பரமசிவம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே ஊர் முக்கியஸ்தர்களை வைத்து பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பரமசிவம் தாக்கப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்த பரமசிவத்தின் மருமகன் திருநாவுக்கரசு மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் என சுமார் 50 பேர் சேர்ந்து, உடையப்பன் தரப்பை சேர்ந்த செல்லையா, சின்னையாநடேசன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் திருநாவுக்கரசு மற்றும் சிலர் செல்லையா, சின்னையா நடேசன் ஆகியோரை தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து உடையப்பன் தரப்பினர் அங்கு திரண்டனர். இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் முயற்சியில் கே.புதுப்பட்டி போலீசார் ஈடுபட்டனர்.

ஆனால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.

இரு தரப்பினரும் அரிவாள், கம்பு, கட்டை, கல் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதனால் அந்த கிராமமே போர்க்களம் போல் மாறியது. ஆனால் சம்பவ இடத்தில் 3 போலீசாரே இருந்ததால், அவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இதனால் அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தற்காப்பிற்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டார். இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த மோதல் சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் புதுக்கோட்டை, அறந்தாங்கி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் சம்பவ இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பார்வையிட்டு, நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். 

இதையடுத்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய பலரை தேடி வருகின்றனர்.

ஒரு கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கட்டுப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments