புதுக்கோட்டையில் கொரோனா தொற்று எதிரொலி: கடைகள் அடைப்பு.! வெறிசோடிய சாலைகள்.!புதுக்கோட்டை நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி கடைகளை அடைக்க வர்த்தக கழகத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.


அதன்படி நேற்று முதல் வருகிற 31-ந் தேதி வரை பால், மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வர்த்தக கழகத்தினர், வியாபாரிகள் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணியிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் திடீரென அதனை மாற்றி வருகிற 30-ந் தேதி வரை கடைகளை அடைக்கப்போவதாக வர்த்தக கழகத்தினர் அறிவித்தனர். 

வியாபாரிகளின் கடை அடைப்புக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் போனது. கடைகள் அடைப்பு தொடர்பாக முறையான அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது. ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் வியாபாரிகள் அறிவித்தபடி நேற்று முதல் கடைகளை அடைத்தனர். கீழ ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி உள்ளிட்ட வீதிகளில் கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. 

இதனால் அப்பகுதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து, பால் கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஓட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்களும் மூடப்பட்டிருந்ததால் உணவு வாங்க முடியாமல் சிலர் சிரமம் அடைந்தனர். 

கடைகள் இல்லாததால் கடைவீதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லை. இருப்பினும் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பலர் வெளியில் சுற்றி திரிந்தனர். போலீசார் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வருகிற 30-ந் தேதி வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். 

நோய் பரவலை தடுக்க வியாபாரிகள் கடைகளை அடைத்திருப்பது ஒருவித நல்ல முடிவு என்றாலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத சூழல் சிரமத்தை தான் ஏற்படுத்தும் என பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments