கிணற்றை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றிய விவசாயிகீரமங்கலம் அருகே கிணற்றை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக விவசாயி மாற்றியுள்ளார். அதில் 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரம்பியது.

கிணற்றை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றிய விவசாயி
கொத்தமங்கலத்தில் விவசாயி வீட்டின் முன் அமைத்துள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி நிரம்பி வழிந்த காட்சி.


நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், மழைநீரை சேமிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் ஏரி, குளம், குட்டைகளில் மழைநீரை சேமிக்க குடிமராமத்து பணிகளும் நடந்து வருகின்றன. வீடுகள், வணிக வளாக கட்டிடங்கள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல அரசு அலுவலகங்களில் பெயரளவிற்கு மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து, மழைநீரை பழைய கிணறுகள் வழியாக பூமிக்குள் செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்த விவசாயியான வீரமணி, தனது வீட்டின் முன் உள்ள பழைய கிணற்றை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி அமைத்தார். மேலும் மழை காலங்களில் தனது வீட்டின் மேற்கூரை ஓடுகளில் இருந்து வழியும் மழைநீரை குழாய்கள் மூலம் தொட்டியில் சேமித்து, அதனை குடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாக கீரமங்கலம், கொத்தமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

இது குறித்து வீரமணி கூறுகையில், ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனதால் தண்ணீருக்கு சிரமம் ஏற்பட்டது. அதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள பழைய கிணற்றை சிமெண்டு பூசி மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி அமைத்தேன். அதற்கு மூடிகள் அமைத்து, மழை பெய்யும்போது சிறிய ஓட்டு வீட்டின் மீதிருந்து வழியும் தண்ணீரை 3 சல்லடைகள் வைத்து வடிகட்டி தொட்டிக்குள் நிரப்பி குடிநீராகவும், செடிகள் வளர்க்கவும் பயன்படுத்தி வருகிறேன். தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்யும் நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையிலேயே அந்த தொட்டி நிரம்பிவிட்டது. இதனால் மீண்டும் மழை பெய்யும்போது தண்ணீர் வெளியேறி வருகிறது. அந்த தண்ணீரை அருகில் உள்ள பழைய கிணற்றுக்கு நிலத்தடி நீருக்காக வாய்க்கால் மூலம் அனுப்பி விடுகிறேன், என்றார்.

இதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்து, அந்த தண்ணீரை பயன்படுத்தினால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி நிலத்தடி நீரையும் சேமிக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments