பொன்னமராவதி அருகே வேன்மோதியதில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது; மின்கம்பியில் சிக்கி வாலிபர் காயம்.!



புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாலு (வயது 24). இவர் மோட்டார் சைக்கிளில் கொப்பனாப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பாலு மீது மின்கம்பி அறுந்து விழுந்தது. 

இதில் அவர் லேசான காயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக வேன்மோதியதை தொடர்ந்து மின்தடை ஏற்பட்டதால் பாலு உயிர்தப்பினார். வேனை ஓட்டி வந்த புகழேந்தி என்பவரும் லேசான காயத்துடன் தப்பினார். 

இந்த விபத்தால் கொப்பனாபட்டி, ஆலவயல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்குமேலாக மின்தடை ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a comment

0 Comments