புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் திருட்டு, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!




புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் திருட்டு, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணல் திருட்டு

கரூர் மாவட்டத்தில் திருட்டு போன இரு சக்கர வாகனத்தை புதுக்கோட்டையில் போலீசார் திறம்பட செயல்பட்டு மீட்டு, திருடரை பிடித்தது பாராட்டுக்குரியது. கொரோனா தடுப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணிக்கு மத்தியில் பணியாற்றும் போலீசாருக்கு மனஅழுத்தத்தை போக்க பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

விடுமுறை தேவைப்படுவோர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு பணியிலும் குறைவில்லாமல் கவனம் செலுத்துகிறோம். மாவட்டத்தில் மணல் திருட்டு, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒரே மாதத்தில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணல் திருட்டு வழக்கில் ஒருவர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

குற்ற வழக்குகள்

மாவட்டத்தில் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் மூலமும், போலீஸ் நிலையங்கள் சார்பிலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Post a Comment

0 Comments