பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு!தமிழகத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளன. வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்து உள்ளார்.

பள்ளிவாசல்களில் தொழுகையின்போது பயன்படுத்த விரிப்புகளை தாங்களே கொண்டு வரவேண்டும். பள்ளிவாசல்களில் உள்ள பொதுவான விரிப்புகள், தொப்பிகள் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பிரார்த்தனையின் போது நெருக்கமாக நிற்பதை தவிர்த்து 2 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஜூம்மா தொழுகையின்போது மக்கள் நெருக்கடி இல்லாமல் தொழுகை நடத்த பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இயல்பு நிலை திரும்பும் வரை பள்ளிவாசல்களில் மதக்கூட்டங்கள் நடத்துவது, மத போதனை வகுப்புகள் நடத்துவது போன்றவற்றுக்கு அனுமதிக்கக்கூடாது. தர்காக்களில் உள்ள புனித பகுதிக்கு மலர்கள், துணிகள் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்த அனுமதிக்க கூடாது. தர்கா பகுதிக்குள் சமூக இடைவெளியை பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும். அங்கு வரும் பக்தர்களுக்கு சாப்பாடு மற்றும் உணவுப்பொருட்கள் எதுவும் வினியோகிப்பதை தவிர்க்கவேண்டும்.

மேற்கண்ட அம்சங்கள் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments