புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு.. அதிகாரிகள் அறிவுரை.!புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நீட்‘ தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை என்ன? என்பது குறித்து அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மருத்துவப்படிப்பில் சேருவதற்கான ‘நீட்‘ தேர்வு வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 409 பேர் எழுத உள்ளனர். இதுதவிர தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலரும் ‘நீட்‘ தேர்வை எழுதுகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆன்லைன் மூலம் ‘நீட்‘ தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல தனியார் பள்ளி மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் மாணவ- மாணவிகள் மும்முரமாக படித்து வருகின்றனர். தேர்வுக்கு தயாராகும் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை மற்றும் தேர்வு மையத்திற்குள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தற்போதே பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் ‘நீட்‘ தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விட்டனர். புதுக்கோட்டையில் தேர்வு மையம் ஒதுக்கப்படவில்லை. பக்கத்து மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் தேர்வு மையம் உள்ளது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் திருச்சியை தேர்வு மையமாக தேர்வு செய்துள்ளனர். சிலர் தஞ்சாவூர் மற்றும் மதுரையையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தேர்வு நாள் நெருங்கியதால் தற்போதே மாணவ-மாணவிகளுக்கு தேர்வு தொடர்பாகவும், தேர்வு மையத்திற்கு செல்வதற்கு தயாராக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஆடைவடிவத்தை தேர்வர்கள் அணிய வேண்டும். மாணவர்கள் முறையான அரை கைச்சட்டை மற்றும் பேன்ட் அணியவும், மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள அரை கை சுடிதார் அணியவும் கூறியுள்ளோம். மாணவ-மாணவிகள் அணிகலன்கள் அணிய வேண்டாம். குறிப்பாக மாணவிகள் வளையல்கள், கம்மல்கள் உள்ளிட்ட ஆபரணங்கள், அலங் கார அணிகலன்களை அணிய வேண்டாம். ஜீன்ஸ், டி-சர்ட்டுகள் அணியக்கூடாது என்பது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்துள்ளோம்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டைகளை மாணவ-மாணவிகள் எடுத்துச்செல்ல வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றால் தேர்வு மையத்தில் சோதனை செய்யும் போது காலவிரயம் ஏற்படும். மேலும் பதற்றத்தை அதிகரிக்கும். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முககவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை கழுவுதல் உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் தேர்வு மையத்தில் வழங்கப்படும் முக கவசத்தை மாணவ-மாணவிகள் அணிய வேண்டும்.

தேர்வு தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக தேர்வு மையத்தினை மாணவ-மாணவிகளின் பெற்றோர் நேரில் சென்று பார்த்து தூரத்தினை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப போக்குவரத்தை 2 வழிகளில் ஏற்பாடு செய்தால் சிக்கல்களை தவிர்க்க முடியும். தேர்வு மதியம் நடைபெறுகிறது என்பதால் மாணவ-மாணவிகள் முன்கூட்டியே காலையிலேயே மையத்திற்கு சென்றடைய வேண்டும். மையத்திற்கு பலத்த சோதனைக்கு பின் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து இணையதளம் வழியாகவும், விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ளதன் மூலமும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

‘நீட்‘ தேர்வினை கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் 468 பேர் எழுதியிருந்தனர். இந்த ஆண்டு சற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. ‘நீட்‘ தேர்வுக்கு பல கெடுபிடிகள் இருந்தாலும் கடந்த ஆண்டில் தமிழகத்தில் பல இடங்களில் முறைகேடு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments