கோட்டைப்பட்டினத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.!



கோட்டைப்பட்டினத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த பகுதியில் ராமேசுவரம் மீனவர்களும் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 13 விசைப்படகுகளை மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு எடுத்து சென்றுவிட்டனர்.

தற்போது இயல்பு நிலை திரும்பியதால் அந்த 13 விசைப்படகு மீனவர்களும் இப்பகுதிக்கு மீண்டும் தொழில் செய்ய வந்துள்ளனர். இந்த 13 விசைபடகும் மீன்வளத்துறையிடம் தகவல் தெரிவிக்காமல் ராமேசுவரம் சென்றதால் அவர்களது படகுகளுக்கு மட்டும் அரசு மானிய விலை டீசலை தற்காலியமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே தங்கள் படகுகளை நிறுத்தி வைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு விசைபடகிற்கு ரூ.10 ஆயிரம் வீதம் 13 விசைப்படகிற்கும் மீன்வளத்துறையினர் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் அந்த 13 விசைப்படகு மீதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ரத்து செய்ய கோரி இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments