வெறிச்சோடிய கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளம்
மீனவர்கள் வேலை நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கிருந்து ஏராளமான மீன்வர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். ராமேஸ்வரம் மீனவர்களும் இப்பகுதியில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது 13 விசைப்படகுகளுடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர்.

தற்போது ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால், ராமேஸ்வரத்திற்கு சென்ற மீனவர்கள் தங்களது விசைப்படகுகளுடன் இப்பகுதிக்கு தொழில் செய்ய வந்துள்ளனர். ஆனால், இந்த 13 விசைப்படகுதாரர்களும் மீன்வளத் துறையினரிடம் தகவல் தெரிவிக்காமல் ராமேஸ்வரம் சென்றதால் அவர்களது படகுகளுக்கு மட்டும் மானிய விலை டீசலை நிறுத்தி வைத்துள்ளதாகவும், மேலும், 1 விசைப்படகிற்கு ரூ.10 ஆயிரம் வீதம் 13 விசைப்படகுதாரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

வெறிச்சோடிய மீன்பிடி தளம்

இதனால், மீனவர்களின் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளம் வெறிச்சோடி காணப்படுகிறது.


Post a Comment

0 Comments