புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பஸ்களில் பயணிகளுக்கு ரூ.5-க்கு முக கவசம்.!அரசு பஸ்களில் பயணிகளுக்கு ரூ.5-க்கு முக கவசம் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வில் கடந்த 1-ந் தேதி முதல் பொதுப்போக்குவரத்து தொடங்கியது. கடந்த 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே பஸ் சேவை தொடங்கி இயங்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் அரசு பஸ்கள் மாவட்டங்களுக்கிடையே ஓடத்தொடங்கி உள்ளது.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் தற்போது இயக்கப்படுகிறது. கடந்த ஓரிரு நாட்களாக புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் சற்று அதிகம் காணப்படுகிறது. தற்போது 60 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழக வட்டாரத்தில் தெரிவித்தனர்.

பஸ்களில் பயணிகள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பஸ்சில் பயணத்திற்கு முக கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு ரூ.5-க்கு முக கவசம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பஸ்களில் பயணிகளுக்கு முக கவசம் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் பஸ்களில் இந்த முக கவசம் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்லும் போது கண்டக்டர்களிடம் 5 முக கவசங்களை விற்பனைக்காக கொடுக்கப்படுகிறது. 

இதனை பயணிகள் யாரேனும் முக கவசம் அணியாமல் இருந்தால் அவர்களிடம் கொடுத்து ரூ.5-ஐ வாங்கி கொள்கின்றனர். அவசரத்தில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக உள்ளது. 

அதேநேரத்தில் ஏற்கனவே முக கவசம் அணிந்து வந்து, அது கிழிந்து போனால் புதிய முக கவசத்தை கண்டக்டர்களிடம் பயணிகள் வாங்கி கொள்கின்றனர். முக கவச விற்பனை தொகையை டிக்கெட் வசூல் கணக்கினை செலுத்தும் போது கண்டக்டர்கள் ஒப்படைப்பார்கள்.


Post a Comment

0 Comments