புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் நிதி ஒதுக்கீடு தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு.!புதுக்கோட்டையில் மத்திய அரசு திட்டத்தின் நிதி ஒதுக்கீடு தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாவட்ட ஊராட்சி தலைவியும் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மத்திய மானிய 15-வது நிதிக்குழு நிதியின் கீழ் முதல் தவணை தொகையாக ரூ.1 கோடியே 48 லட்சம் வரப்பெற்றுள்ளது. இத்தொகையினை மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கம் மூலம் செயல்படுத்த மாவட்ட ஊராட்சி திட்டமிட்டது. இதற்கு தீர்மானம் நிறைவேற்ற மாவட்ட ஊராட்சியின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி (அ.தி.மு.க.) தலைமை தாங்கினார். ஊராட்சி உதவி இயக்குனர் வெங்கடாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலாளர் லட்சுமி தீர்மானம் குறித்து பேசுகையில், “கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வீடுகள் தோறும் குடிநீர் குழாய்கள் இணைப்பு, அதற்கான ஆழ்குழாய் அமைத்தல், தண்ணீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இது 5 ஆண்டு கால திட்டமாகும். முதல் கட்டமாக நமது மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் குடிநீர் பணிகள் மேற்கொள்ள தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் சண்முகம் (த.மா.கா.), ராஜேந்திரன், பாண்டியன் (அ.தி.மு.க.), ஸ்டாலின், செல்வம் (தி.மு.க.) உள்ளிட்டோர் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கவுன்சிலர்கள் பேசுகையில், “திட்டத்தில் முன்கூட்டியே கிராமங்களை தேர்வு செய்துவிட்டால் எங்களை தேர்ந்தெடுத்த பகுதிகளில் உள்ள மக்களின் கோரிக்கைகளை நாங்கள் எப்படி நிறைவேற்ற முடியும். நிதி ஒப்புதலுக்கு மட்டும் நாங்கள் வேண்டும். திட்டப்பணிகளில் இடங்களை தேர்வு செய்ய மாவட்ட கவுன்சிலர்கள் வேண்டாமா?. மக்களுக்கு நாங்கள் கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற தேவையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்குங்கள்” என்றனர்.

கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சி செயலாளரும், ஊராட்சி உதவி இயக்குனரும் தெரிவித்தனர். இப்படி விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவி மவுனமாக இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது கருத்தையும் பேசுமாறு கவுன்சிலர்கள் குரல் எழுப்பினர். 

இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சுமி பேசுகையில்,“கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நானும் வலியுறுத்துகிறேன். உங்களது நியாயம் எனக்கு தெரிகிறது. தற்போது இந்த தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றார். இதேபோல மாவட்ட ஊராட்சி துணை தலைவி உமாமகேஸ்வரியும் கவுன்சிலர்களின் நிலைப்பாட்டை தானும் வலியுறுத்துவதாக கூறினார். 

இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படாமல் கூட்டம் முடிவு பெற்றது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை செயல்படுத்த அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதனை மாவட்ட ஊராட்சி தலைவியும், துணை தலைவியும் வலியுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஊராட்சி செயலாளர் லட்சுமியிடம் கேட்ட போது, இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அடுத்ததாக கவுன்சிலர்களிடம் பேசி, கூட்டம் நடத்தி தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் இயக்க திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments