பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தொடங்கியது.. புதுக்கோட்டையில் 262 பேர் எழுதினர்எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான தேர்வு தொடங்கியது. புதுக்கோட்டையில் 262 பேர் எழுதினர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா ஊடரங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டன. கடந்த கல்வியாண்டில் நடைபெற வேண்டிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மேலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கும் தேர்வை ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தது.

இதற்கிடையில் தனித்தேர்வர்களில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவது கொரோனா காலத்தில் சிரமமாக இருக்கும் எனவும், உதவியாளர்களும் சிரமம் அடைவார்கள் எனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடாரப்பட்டது. தேர்வு தகுந்த முன்னெச்சரிக்கையோடு கொரோனா தடுப்பு நடவடிக்கையோடு என அரசு தெரிவித்ததால், தேர்வை ரத்து செய்ய கோர்ட்டு மறுத்ததது. இந்த நிலையில் அறிவித்தப்படி எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. நேற்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. தேர்வர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் அனுமதிக்கப்பட்டனர். மேலும் முக கவசம் அணிந்திருந்தனர். சமூக இடைவெளியோடு தேர்வை தேர்வர்கள் எழுதினர். இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 333 பேரில் 262 பேர் எழுதினர். 

இதேபோல பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் தேர்வெழுதாதவர்களுக்கு உடனடி தேர்வு நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 மையங்களில் 165 பேரில் 126 பேர் தேர்வெழுதினர். ஆசிரியர் பட்டய கல்வி முதலாமாண்டு தேர்வும் நேற்று தொடங்கியது.

தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இத்தேர்வுகள் வருகிற 7-ந் தேதி வரை பகுதி, பகுதியாக நடைபெறுவதாக அதிகாரிகள் கூறினர்.


Post a Comment

0 Comments