புதுக்கோட்டையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் தவறவிட்ட தங்க நகையை கண்டெடுத்த கைதி.! உரியவரிடம் ஒப்படைப்பு.!



புதுக்கோட்டையில் கடந்த வருடம் தமிழக அரசின் சிறைத் துறை சார்பில் சிறைவாசிகள் மட்டும் பணி செய்யும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் தமிழகம் முழுவதும் பல இடங்களில் தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி புதுக்கோட்டை பாஸ்டல் ஸ்கூல் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறை அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இங்கு பணிபுரியும் 20 பணியாளர்களும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்கள் தான்.

இந்த பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருபவர்களை  புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர்  மற்றும் கூடுதல் சிறைதுறை காவலர்கள்  கண்காணித்து வருகின்றனர்.  

இதனிடையே நேற்று புதுக்கோட்டை கட்டிய வயல் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சரவணன் என்பவர் தனது காருக்கு பெட்ரோல் போடுவதற்காக இந்த பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். அப்போது சரவணன் கழுத்தில் அணிந்திருந்த ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள  ஒன்றரை பவுன் தங்கச் செயின் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதை  கவனிக்காமல் சரவணன் சென்றுவிட்டார். அப்போது அங்கு பணியிலிருந்த  சிறைவாசியான பெட்ரோல் பங்க் ஊழியர் கிறிஸ்து ஆரோக்கியராஜ் தங்கச் செயின் ஒன்று கீழே கிடந்ததை கண்டு அதனை எடுத்து பெட்ரோல் பங்கு அலுவலர் விஜயகுமார் மற்றும்  உதவி சிறை அலுவலர் பாலமுருகன் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் செயின் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று  தங்கச் செயினை தொலைத்த கட்டியா வலை சேர்ந்த சரவணன் செயினை காணவில்லை என்று அவர் சென்ற இடங்களில் தேடி பார்த்து  பெட்ரோல் பங்கிற்கு வந்த தான் தவறவிட்ட செயின் குறித்து கேட்டுள்ளார். இதையடுத்து  அவரிடம் நகை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் சிறை காவலர்கள் விசாரணை நடத்தியும் மற்றும் பெட்ரோல் பங்கிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தபோது தவற விட்ட செயின் சரவணனுடையதுதான் என தெரியவந்தது.

 இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி நேற்று சரவணன் மற்றும் அவரது மனைவியை பெட்ரோல் பங்கிற்கு வரவழைத்து அவர்களிடம் தங்க செயினை ஒப்படைத்தார்.

மேலும் இந்த தங்கச் செயினை நேர்மையோடு எடுத்து  ஒப்படைத்த பெட்ரோல் பங்க் ஊழியரும்  சிறைவாசியும் கிறிஸ்து ஆரோக்கியராஜை  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி பாராட்டினார்.

இதேப்போல்  கடந்த ஆண்டு இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்து ஒருவர்  ரூ 1.5 லட்சம் பணத்தை தவற விட்டு சென்ற நபரிடம் இங்கு பணிபுரியும் சிறைவாசிகள் அந்தப் பணப்பையை எடுத்து  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments