அதிகரிப்பு.! புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் புதிதாக 53 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை.!புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் புதிதாக 53 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. மேலும் தனியார் பள்ளிகள் ஆன்-லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர். அரசு தரப்பிலும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக வருகிற 28-ந் தேதி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலம் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் தங்களது மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் விவரங்கள், மாணவர்கள் விவரம், புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம், விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்ட விவரம், பள்ளி கட்டிடங்களின் தன்மை, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டவை உள்ளிட்ட விவரங்களை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,959 பள்ளிகள் உள்ளன. இதில் அரசு பள்ளிகள் மட்டும் 1,566-ம், உதவி பெறும் பள்ளிகள் 89-ம், பகுதி மட்டும் உதவிபெறும் பள்ளிகள் 23-ம் உள்ளன. இந்த பள்ளிகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில் புதிதாக சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியில் சேர்ந்தவர்கள் என மொத்தம் இதுவரை 53 ஆயிரத்து 42 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தையும் கல்வித்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இந்த விவரத்தை நாளைக்குள் புதுக்கோட்டை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

மேலும் 28-ந் தேதி காணொலிக்காட்சி ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் பலர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments