கீரமங்கலம் அருகே தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்கள் வீடுகளுக்கே சென்று பயிற்சி அளிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்.!கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று தொடர்ந்து சாதித்து வருகின்றனர். அதனால் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.

அதேபோல ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு நடத்தும் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாதாந்திர உதவித் தொகை பெற்று வருகின்றனர். இதே மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும் மாநில அரசு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இரண்டு உதவித் தொகைகளும் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தொலைக்காட்சி வழியில் பாடங்களை கவனிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர் அன்பரசன் மாணவர்களின் சந்தேகங்களை போக்கி வந்ததுடன் வாட்ஸ்-அப் குழு மூலம் மாணவர்களை இணைத்து தினசரி மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகிறார். 

தற்போது தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்தும் விதமாக மாணவர்களின் வீடுகளுக்கே செல்லும் ஆசிரியர் அன்பரசன் தேர்வுகளுக்கு தயாராவது குறித்து பயிற்சி கொடுத்ததுடன் பாடங்களில் இருந்து கேள்விகளை தயாரித்து படிப்பது குறித்து மாதிரி வினாக்களுடன் விளக்கினார். 

திறனாய்வுத் தேர்வுகளுக்கு தயாராவதில் ஏற்படும் சந்தேகங்களை வாட்ஸ்-அப் மூலம் கேட்டு தெளிவு பெறலாம் என்று கூறிய ஆசிரியர் வாரத்தில் சில நாட்கள் மாணவர்கள் வீடுகளுக்கு சென்று பயிற்சி அளிக்கிறார். அவருடன் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சிலரும் சென்றனர். ஆசிரியரின் இந்த செயல் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments