கொரோனா சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை அரசு மருத்துவா் மரணம்



திருச்சி தனியாா் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த அரசு மருத்துவா் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டையில் பல்லவன் குளம் அருகே பகுதியை சேர்ந்தவர் முஜிபுர்ரகுமான் (வயது47). இவர் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராகவும், அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர். 

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர், கடந்த சில மாதங்களாக பணிக்கு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், தனது கிளினிக்கில் புறநோயாளிகள் பிரிவு மட்டும் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதித்த அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் முஜிபுர்ரகுமான் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். அவரது மறைவுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவியை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் புதுக்கோட்டையை சேர்ந்த 46 வயது ஆண் ஒருவர், 45 வயது ஆண், 77 வயது முதியவர் ஆகியோர் கொரோனா தொற்றுடன் இணை நோய்க்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தனர். அரசு டாக்டர் உள்பட 4 பேர் இறந்த நிலையில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறையினரால் நேற்று மாலை வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 793 ஆக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 917 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 741 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments